இந்திய அணியின் முகத்தை மாற்றியவர் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. ரசிகர்களால் தாதா என்று பாசமாக அழைக்கப்படும் கங்குலியின் 47வது பிறந்தநாள் இன்று. 

இந்திய அணியை வளர்த்தெடுத்ததில் முக்கியமான பங்கு கங்குலியுடையது. சூதாட்டப் புகாரால் இந்திய அணி சின்னா பின்னமான சமயம் 2000ம் ஆண்டு. அந்த சமயத்தில் துவண்டு கிடந்த இந்திய அணியின் கேப்டன் ஆனார் காங்குலி. அப்படியொரு இக்கட்டான நிலையில் அணியை ஒருங்கிணைத்து உலக அரங்கில் ஒரு கம்பீர நடை போட வைத்தவர் கங்குலி. இந்திய அணியை பார்த்து சிரித்தவர்களை மிரளவைத்தவர் கங்குலி. 

அந்த காலக்கட்டத்தில் வலுவாக திகழ்ந்த ஆஸ்திரேலியா போன்ற அணிகளை அதன் சொந்த மண்ணிலேயே தெறிக்கவிட்டவர் கங்குலி. சேவாக், யுவராஜ், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், கைஃப் போன்ற இளம் வீரர்களை இனம்கண்டு வாய்ப்பு கொடுத்து வளர்த்தெடுத்தார். சேவாக்கை ஓபனிங் இறக்கியது, தோனியை முன்வரிசையில் இறக்கி அவரது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்தது, 2003 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு அழைத்து சென்றது என கங்குலி, ஒரு கேப்டனாக இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார்.

கங்குலிக்கு இன்று 47வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தனக்கே உரிய பாணியில் தனது கேப்டனுக்கு வாழ்த்து கூறியுள்ளார் சேவாக். லண்டன் லார்ட்ஸில் கங்குலி சட்டையை கழற்றி சுற்றிய ஃபோட்டோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள சேவாக், கங்குலிக்கும் 56 என்ற நம்பருக்கும் இடையேயான உறவை ஒப்பிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

56 இன்ச் மார்பளவு கொண்ட கேப்டன் தாதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கங்குலி ஜூலை(7வது மாதம்) மாதம் 8ம் தேதி பிறந்தார். அதனால் 8*7 = 56. கங்குலியின் மார்பு அளவு 56 இன்ச். அவரது உலக கோப்பை சராசரி 56 என கங்குலிக்கும் 56க்கும் இடையேயான உறவை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுக்குனே தனியா உட்கார்ந்து யோசிப்பார் போல சேவாக்..