ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் நடப்பது சந்தேகமாகியுள்ளது. ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக மும்பை இந்தியன்ஸூம் சிஎஸ்கேவும் திகழ்கின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி சூதாட்ட புகார் காரணமாக 2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு சீசன்களிலும் ஆடவில்லை. எனவே அந்த அணி இதுவரை ஆடியுள்ள 10 சீசன்களில் 8 சீசன்களில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று அவற்றில் 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

சிஎஸ்கே அணி ஆடிய 10 சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. லீக் சுற்றில் வெளியேறியதே கிடையாது. அனைத்து சீசன்களிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டும்தான். அந்தளவிற்கு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய அணி  சிஎஸ்கே. 

சிஎஸ்கே அணியை 2013, 2015, 2019 ஆகிய மூன்று சீசன்களின் இறுதி போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தி கோப்பையை வென்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றிருந்தாலும், இரு அணிகளூம் நேருக்கு நேர் இறுதி போட்டியில் மோதிய 4 சீசனில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் வென்றிருந்தாலும்கூட, மும்பை இந்தியன்ஸை விட சிஎஸ்கே தான் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி என்கிறார் நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் ஸ்காட் ஸ்டைரிஸ்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்காட் ஸ்டைரிஸ், மும்பை இந்தியன்ஸை விட சிஎஸ்கே தான் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி என்பதற்கு என்னிடம் 3 பாயிண்ட்கள் உள்ளன. சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் பெரும்பாலான நாக் அவுட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்திய அணிக்கு நிறைய திறமையான வீரர்களை ஐபிஎல் அணிகள் உருவாக்க வேண்டும். அந்தவகையில் ஏராளமான வீரர்களை இந்திய அணிக்கு சிஎஸ்கே கொடுத்திருக்கிறது. இந்திய அணிக்கு வீரர்களை உருவாக்கி கொடுக்கும் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. 

ஒரு சீசனில் லீக் சுற்றிலேயே வெளியேறுவது, ஒரு சீசனில் டைட்டிலை வெல்வது என்றில்லாமல் அனைத்து சீசன்களிலும் சீரான ஆட்டத்தை ஆடியுள்ளது. அந்தவகையில் மும்பை இந்தியன்ஸை விட சிஎஸ்கே தான் சிறந்த அணி என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்