உலக கோப்பை தொடரை பாகிஸ்தான் அணி மோசமாக தொடங்கியது. ஆனால் லீக் சுற்றின் பிற்பாதியில் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவருகிறது. வெஸ்ட் இண்டீஸிடம் முதல் போட்டியிலேயே மரண அடி வாங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி கண்டது. அதன்பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

அதன்பின்னர் சரிவிலிருந்து வெகுண்டெழுந்த பாகிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த வெற்றியின் மூலம் கிடைத்த உத்வேகத்தில், நியூசிலாந்து அணியையும் வீழ்த்தியது. இந்த உலக கோப்பையில் தோல்வியையே தழுவாமல் இருந்த நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வியை பரிசளித்தது பாகிஸ்தான் அணி. 

இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. எஞ்சிய 2 போட்டிகளிலும் அந்த அணி ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்த 2 அணிகளையும் வீழ்த்தும் பட்சத்தில், இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். 

உலக கோப்பை தொடரை மோசமாக தொடங்கி தற்போது அபாரமாக ஆடிவரும் பாகிஸ்தான் அணிக்கு வரலாறு திரும்பியுள்ளது. 1992ம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. அந்த உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முதல் 7 போட்டிகளின் முடிவுகளும், இந்த உலக கோப்பையில் அந்த அணியின் முதல் 7 போட்டிகளின் முடிவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன. எனவே 1992ல் கோப்பையை வென்ற மாதிரியே இந்த முறையும் பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லுமா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

இந்நிலையில், 1992ல் நடந்ததை போலவே இப்போதும் நடந்து கொண்டிருப்பது குறித்து பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சர்ஃபராஸ், 1992 உலக கோப்பை மற்றும் வரலாறு  திரும்பியதை பற்றியெல்லாம் நாங்கள் நினைக்கவேயில்லை. எங்களுடைய எண்ணமெல்லாம் ஒவ்வொரு போட்டியிலுமே கவனம் செலுத்தி வெற்றி பெறுவதான். ஒரு அணியாக நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். இனிவரும் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வெற்றி பெறுவோம் என நம்புவதாக சர்ஃபராஸ் தெரிவித்தார்.