தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், சுமார் கடந்த 3 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணிக்கு வந்த புதிதில் சிறப்பாக பந்துவீசினர். ஆரம்பத்தில் அவர்கள் ஆடிய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து எதிரணி பேட்ஸ்மேன்களையும் தெறிக்கவிட்டனர். மிடில் ஓவர்களில் அவர்கள் விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்தனர். 

இதையடுத்து அவர்களையே நிரந்தரமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி ஆடவைத்தது. அதனால் அஷ்வினும் ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் 2018 ஆசிய கோப்பையில் ஆல்ரவுண்டராக ஜடேஜா செம கம்பேக் கொடுத்ததுடன், மீண்டும் அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்து உலக கோப்பையில் ஆடினார்.

கெரியரின் தொடக்கத்தில் அசத்திய குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் பவுலிங் 2019 உலக கோப்பையில் எடுபடவில்லை. இங்கிலாந்து உள்ளிட்ட பல எதிரணிகள் குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் பவுலிங்கை பொளந்துகட்டினர். அதன் எதிரொலியாக உலக கோப்பைக்கு பின்னர் இருவரும் ஒன்றாக அணியில் எடுக்கப்படுவதில்லை. 

ரிஸ்ட் ஸ்பின்னர்களை நம்பி ஓரங்கட்டப்பட்ட அஷ்வின் - ஜடேஜா ஆகிய இருவரில் ஜடேஜா மீண்டும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெற்றுவிட்ட போதிலும் அஷ்வினுக்கு 3 ஆண்டுகளாக இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

ஆஃப் ஸ்பின்னரான அஷ்வினை ஓரங்கட்டிவிட்டு ரிஸ்ட் ஸ்பின்னர்களை முயற்சி செய்வதற்காக குல்தீப் - சாஹலை எடுத்த இந்திய அணி, பின்னர் அவர்களையே பிடித்து தொங்கியது. ஆனால் அவர்கள் சீசன் பவுலர்களாகிவிட்டனர். இப்போதெல்லாம் அவர்களது பவுலிங் பெரிதாக எடுபடவில்லை. 2 ஆண்டுகளில் சோடை போய்விட்டனர்.

ஆனால் அஷ்வின் தரமான ஸ்பின்னர். 70 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகா 250, 300, 350 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர். 2010ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான அஷ்வின், 111 போட்டிகளில் ஆடி 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மீண்டும் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அஷ்வின் இருக்கிறார். ஒரு தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர் தானே தவிர, அதில் ரிஸ்ட் ஸ்பின்னர் - ஆஃப் ஸ்பின்னர் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என்பது பெரிய ஜாம்பவான்களின் கருத்து. இந்த கருத்தை ஏற்கனவே முத்தையா முரளிதரன், கவுதம் கம்பீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின் ஜாம்பவான் சக்லைன் முஷ்டாக், அஷ்வினுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அஷ்வின் குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், ஸ்பின் பவுலரின் Class தான் நிரந்தரம். ஆஃப் ஸ்பின்னர் - ரிஸ்ட் ஸ்பின்னர் என்ற பாகுபாடெல்லாம் சும்மா.. பவுலிங் திறமையும், ஆட்டத்தின் போக்கை மதிப்பும் திறமையும் தான் முக்கியம். இந்திய ஒருநாள் அணியிலிருந்து அஷ்வின் ஓரங்கட்டப்பட்டது எனக்கே சர்ப்ரைஸாக இருந்தது.

டெஸ்ட் கிரிக்கெட் அல்லது ஒருநாள் போட்டி என எதுவாக இருந்தாலும் பேட்ஸ்மேனை வீழ்த்தும் வித்தையறிந்தவர் அஷ்வின். ரன் அடிக்காமல் எதிரணியை கட்டுப்படுத்துவதை யார் வேண்டுமானாலும் செய்ய முடியும். சிலர் விக்கெட்டுகளை வீழ்த்தும் வித்தைக்காரர்கள். ஆனால் அஷ்வின், அந்த 2 வித்தைகளையும் அறிந்தவர். அவரை எப்படி இந்திய அணி ஓரங்கட்டியது என கேள்வி எழுப்பியுள்ள சக்லைன் முஷ்டாக், அணியின் சிறந்த வீரர்களுக்கு எப்போதுமே ஆதரவாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.