உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியோ அல்லது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியோதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டும் வலுவாக இருந்தது. மிடில் ஆர்டர் தான் சொதப்பலாக இருந்தது. ஆனால் தோனி ஃபார்முக்கு திரும்பி போட்டிக்கு போட்டி தெறிக்கவிடுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தோனி அபாரமாக ஆடிவருகிறார். 

நான்காம் வரிசையில் யாரை இறக்குவது என்பது தொடர்பான கருத்துகளை முன்னாள் வீரர்கள் இன்னும் தெரிவித்துவருகின்றனர். விஜய் சங்கர் அல்லது ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே இரண்டு பயிற்சி போட்டிகளிலும் கேஎல் ராகுல் 4ம் வரிசையில் இறக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதமடித்தார். இதன்மூலம் நான்காம் வரிசைக்கு விஜய் சங்கருடனான போட்டியில் தனக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார் என்றே கூறலாம். 

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் சதமடித்தபோதிலும், அவரை நான்காம் வரிசையில் இறக்க வேண்டாம் எனவும் விஜய் சங்கரைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் எனவும் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், நான்காம் வரிசையில் இறக்கப்படுவதற்காகத்தான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். அதனால் அவரை முதல் சில போட்டிகளில் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும். அவர் சரியாக ஆடாத பட்சத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் ராகுலை இறக்கலாம். ஆனால் எடுத்த எடுப்பிலேயே விஜய் சங்கருக்கு வாய்ப்பளிக்காமல் ராகுலை இறக்கக்கூடாது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விஜய் சங்கர் ஆடவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக 5ம் வரிசையில் தான் இறக்கப்பட்டார். எனவே விஜய் சங்கரைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். 

அதேபோல ஐந்தாம் வரிசையில் தோனிக்கு பதிலாக கேதரை இறக்க வேண்டும் எனவும் 6ம் வரிசையில் தோனியையும் அடுத்து ஹர்திக்கையும் இறக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ள ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி(கேப்டன்), விஜய் சங்கர், கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சாஹல்.