உலக கோப்பை நெருங்கிய நிலையில், அனைத்து அணிகளும் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகின்றன. 

கோலி தலைமையிலான இந்திய அணியும் இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளாக பார்க்கப்படுகின்றன. இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் உலக கோப்பையில் சவாலான அணிகளாக திகழும். 

இந்த உலக கோப்பையில் இந்திய அணியின் மிகப்பெரிய பலம் பவுலிங். பொதுவாக நல்ல பேட்டிங் அணியாகவே திகழ்ந்த இந்திய அணி தற்போது சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. பும்ரா, ஷமி ஆகிய இருவரும் வேகத்தில் மிரட்டுகின்றனர். குல்தீப் யாதவ் சுழலில் எதிரணிகளை தெறிக்கவிடுகிறார். 

தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்னைகளை எதிர்கொண்ட ஷமி, கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் அணியில் இணைந்தார். பிரச்னைகளிலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்த ஷமி, தற்போது பவுலிங்கில் மிரட்டுகிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு போட்டிகளிலுமே அபாரமாக வீசிவருகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் ஷமி ஆடினார். அந்த 3 போட்டிகளில் 2ல் இந்திய அணி வென்றது. விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமல்லாமல் எதிரணி வீரர்களை ரன் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தி நெருக்கடியை ஏற்படுத்துகிறார் ஷமி. ஷமியின் பவுலிங் நல்ல வேகத்துடன் ஸ்விங் ஆகிறது. எனவே ஸ்விங்கிற்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட இங்கிலாந்தில் உலக கோப்பை நடக்க உள்ளதால் பும்ராவுடன் சேர்த்து ஷமியின் பவுலிங் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புவனேஷ்வர் குமார் - பும்ரா ஜோடிதான் வேகப்பந்து ஜோடியாக திகழ்ந்தது. ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராகத்தான் மீண்டும் அணியில் இணைந்தார் ஷமி. ஆனால் தற்போதைய சூழலில் ஷமி - பும்ரா ஜோடி நிரந்தர ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக உருவெடுத்துவிட்டது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் ஷமி அபாரமாக பந்துவீசிய நிலையில், நான்காவது போட்டியில் அணியில் இணைந்த புவனேஷ்வர் குமார், பெரிதாக வீசவில்லை. ஃபின்ச்சின் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தியிருந்தாலும், அதன்பிறகு ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத புவனேஷ்வர் குமார், டெத் ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினார். 9 ஓவர்கள் வீசி 67 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். 

புவனேஷ்வர் குமார் சோபிக்காத நிலையில், ஷமி செம ஃபார்மில் அபாரமாக வீசிக்கொண்டிருக்கிறார். 2015ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் சுமார் 3 ஆண்டுகாலம் ஷமி ஆடவேயில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவந்தார். டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக வீசியதை அடுத்து மீண்டும் ஒருநாள் அணியில் இணைந்த ஷமி, உலக கோப்பை இடத்தை உறுதி செய்துவிட்டார்.

இந்நிலையில், உலக கோப்பையில் ஆடும் லெவனில் பும்ராவுடன் ஷமி நிரந்தர ஃபாஸ்ட் பவுலராக ஆடவைக்கலாம் எனவும் புவனேஷ்வர் குமாரை பென்ச்சில் உட்கார வைக்கலாம் எனவும் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் பார்த்தால் பும்ராவுடன் புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷமியை இறக்கலாம். புவனேஷ்வர் குமாரை பென்ச்சில் உட்கார வைக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.