உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்திய அணியின் முதல் மூன்று வீரர்கள் வலுவாக உள்ளனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் டாப் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். தோனி, கேதர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரும் முறையே 5,6,7 ஆகிய வரிசைகளில் களமிறங்குவர். 

ஓரளவிற்கு அணி உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 4ம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 4ம் வரிசைக்கு ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, தோனி உட்பட ஏராளமான வீரர்களை களமிறக்கி பரிசோதித்த இந்திய அணி, ஒருவழியாக ராயுடுவை உறுதி செய்தது. 

ராயுடுவும் ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய தொடர்களில் நன்றாக ஆடினார். இதையடுத்து ராயுடுதான் உலக கோப்பையில் நான்காம் வரிசையில் இறங்கப்போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அண்மையில் இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராயுடு சோபிக்கத்தவறினார். முதல் மூன்று போட்டிகளில் சரியாக ஆடவில்லை. 3 போட்டிகளிலும் சேர்த்தே வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். 

3 போட்டிகளில் சொதப்பியதால், கடைசி 2 போட்டிகளில் ராயுடு அதிரடியாக நீக்கப்பட்டார். ராயுடுவின் நீக்கம், 4ம் வரிசைக்கு வேறு வீரரை இந்திய அணி தேடுகிறது என்ற தகவலை உணர்த்துவதாக அமைந்தது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இன்னும் 4ம் வரிசை வீரர் உறுதி செய்யப்படாதது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

நான்காம் வரிசை வீரர் இன்னும் உறுதி செய்யப்படாததால் பல முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கலுக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவருகின்றனர். 

கங்குலி, பாண்டிங், கும்ப்ளே, ஹைடன் என பல முன்னாள் ஜாம்பவான்கள் தங்களது பரிந்துரைகளை தெரிவித்துவரும் நிலையில், முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், இந்திய அணிக்கு யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னாவை போல சிறந்த மற்றும் வலுவான 4ம் மற்றும் 5ம் வரிசை மிடில் ஆர்டர் வீரர்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை ஏராளமான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டும் அவர்கள் அதை பயன்படுத்தி நிரந்தர இடம் பிடிக்கவில்லை. இது வாய்ப்பு வழங்கியவர்களின் தவறல்ல; அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளாத வீரர்களின் தவறு. இப்போதைக்கு இருக்கும் வீரர்களில் விஜய் சங்கரை 4ம் வரிசையிலும் கேதர் ஜாதவை 5ம் வரிசையிலும் இறக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார். 

வேறு ஆப்சன் இல்லாததால் இந்த பரிந்துரையை செய்வதாகவும் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.