ஆக்லாந்தில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 204 ரன்கள் என்ற இலக்கை 19வது ஓவரிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியும் ஆக்லாந்திலேயே நடந்தது. நேற்று நடந்த இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றியை பெற்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் மார்டின் கப்டிலை தவிர வேறு யாருமே அதிரடியாக ஆடவில்லை. அதிரடியாக ஆடிய கப்டிலை தாகூர் 33 ரன்களில் வீழ்த்தினார். முன்ரோ, வில்லியம்சன், டெய்லர் ஆகியோர் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் திணறினர். இந்திய அணியின் பவுலிங் மிகவும் அபாரமாக இருந்தது. 

குறிப்பாக பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகியோர் அபாரமாக பந்துவீசி ரன்ரேட்டை கட்டுப்படுத்தினர். இவர்களின் பவுலிங்கை அடித்து ஆட முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறினர். வில்லியம்சன் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் ஆட்டமிழந்தார். முன்ரோ 25 பந்தில் 26 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். டெய்லர் 24 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அவுட்டானார். இவ்வாறு இந்திய அணியின் அபாரமான பவுலிங்கால் அந்த அணி 20 ஓவரில் வெறும் 132 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் பும்ரா, தாகூர், துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பும்ரா 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஜடேஜாவின் பவுலிங் பும்ராவை விட அபாரமாக இருந்தது. 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து 133 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்துவிட்ட நிலையில், ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அபாரமாக ஆடி அணியை வெற்றி பெற செய்தனர். முதல் போட்டியில் அரைசதம் அடித்த ராகுல், இந்த போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த போட்டியில் ஒரு பவுலருக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும் வர்ணனையாளரும் சர்ச்சை கருத்துக்கு பெயர்போனவருமான சஞ்சய் மஞ்சரேக்கர் டுவிட்டரில் கருத்து தெரிவித்தார். உடனே, அந்த பவுலர் யார்? பெயரை சொல்லுங்கள் என்று ஜடேஜா, சஞ்சய் மஞ்சரேக்கரிடம் கேட்டிருந்தார். 

அதற்கு, நீங்கள்(ஜடேஜா) அல்லது பும்ரா என்று பதிவிட்ட சஞ்சய் மஞ்சரேக்கர், பின்னர் ஒரு முடிவாக, பும்ரா என்று குறிப்பிட்டார். 3,10, 18, 20 ஆகிய முக்கியமான ஓவர்களை அதிகமான ரன்களை விட்டுக்கொடுக்காமல் வீசினார். எனவே அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்தார். 

ஏற்கனவே சஞ்சய் மஞ்சரேக்கர் மற்றும் ஜடேஜாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக கோப்பையின்போது, ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்தார் சஞ்சய் மஞ்சரேக்கர். பின்னர் அரையிறுதியில் ஜடேஜாவின் அபாரமான பேட்டிங்கை பார்த்த பிறகு, தனது கருத்தை சஞ்சய் வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.