ஐபிஎல்லில் அதிகபட்சமாக 4 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில், ரோஹித் சர்மா, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பும்ரா, மலிங்கா என அந்த அணியின் கோர் டீம் வலுவாக இருப்பதுதான் அந்த அணி ஐபிஎல்லில் கோலோச்ச முக்கியமான காரணம். இந்த சீசனில் மலிங்கா ஆடவில்லை. ஆனால் பும்ரா மற்றும் டிரெண்ட் போல்ட் ஆகியோர் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி, அதிரடியான பேட்ஸ்மேன்கள், மிரட்டலான பவுலர்கள், அருமையான ஆல்ரவுண்டர்கள் என நல்ல கலவையிலான அணி. இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரும் அணியில் உள்ள நிலையில், கடந்த சீசனில் குயிண்டன் டி காக்கை எடுத்தது மும்பை இந்தியன்ஸ். அவரும் டாப் ஆர்டரில் கடந்த சீசனில் அருமையாக ஆடினார்.

ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா என அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் ஏற்கனவே மிக வலுவாக உள்ள நிலையில், அந்த அணி இந்த சீசனுக்கான ஏலத்தில், கேகேஆர் அணியால் கழட்டிவிடப்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் லின்னை அவரது அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

கிறிஸ் லின் ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக சிறப்பாகவே ஆடிவந்தார். ஐபிஎல்லில் அவரது ஸ்டிரைக் ரேட் 140. 2018 சீசனில் 491 ரன்கள் மற்றும் கடந்த சீசனில் 405 ரன்கள் என்ற நன்றாகவே ஸ்கோர் செய்தார். ஆனால் அவர் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள திணறுவது அப்பட்டமாக தெரியுமளவிற்கு, ஸ்பின் பவுலிங்கில் சொதப்பினார். இந்நிலையில், கேகேஆர் அணியால் இந்த சீசனில் கழட்டிவிடப்பட்ட கிறிஸ் லின்னை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்பது முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கரின் கருத்து. இதுகுறித்து பேசியுள்ள மஞ்சரேக்கர், மும்பை இந்தியன்ஸ் அணியில் குயிண்டன் டி காக் மற்றும் இஷான் கிஷான் ஆகிய வீரர்கள் உள்ளனர். எனவே கிறிஸ் லின்னுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்றார்.

ஒரு அணியில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே எடுக்க முடியும். மும்பை இந்தியன்ஸ் அணியில், குயிண்டன் டி காக், பொல்லார்டு, டிரெண்ட் போல்ட், ரூதர்ஃபோர்டு ஆகிய 4 வெளிநாட்டு வீரர்களும் ஆடும் லெவனில் இடம்பெறவே அதிக வாய்ப்புள்ளது. ஓபனிங் காம்பினேஷன் ரோஹித் சர்மா மற்றும் குயிண்டன் டி காக் இருப்பதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான கிறிஸ் லின்னுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. அதுமட்டுமல்லாது, அவர் அண்மையில் ஆடிய கரீபியன் பிரீமியர் லீக் தொடரிலும் சரியாக ஆடவில்லை.