கொரோனா உலகம் முழுதும் தீயாய் பரவிவரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, கொரோனாவை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக பரவுவதை தடுப்பதற்காக வரும் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருப்பதால் சமூக பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது. அதனால் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் ரத்தாகிவிட்டன. ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியிருக்க வேண்டிய உலகின் மிகப்பெரிய டி20 தொடரான ஐபிஎல் தொடர், ஏப்ரல் 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னரும் தொடங்குவது சந்தேகம் தான். ஏனெனில் இந்தியாவில் கொரோனா நிலைமை சீரடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

எனவே இந்த முறை ஐபிஎல் நடப்பது சந்தேகமாகியுள்ள நிலையில், இந்த சீசன் தாமதமாக தொடங்கப்பட நேர்ந்தால், குறைவான போட்டிகள் நடத்தப்படலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்பன போன்ற பல கருத்துகள் உலாவந்தன. ஆளாளுக்கு ஒரு ஐடியா கொடுத்துவருகின்றனர். 

ஆனால். ஐபிஎல் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஏப்ரல் 15ம் தேதி ஆலோசனை நடத்தி அதன்பின்னர் தான் ஐபிஎல் குறித்த திடமான முடிவெடுக்கப்படும். 

இந்நிலையில், ஐபிஎல்லை நடத்தியாக வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், ஐபிஎல் நடத்த அதிகாரப்பூர்வ அனுமதியை பெற்று ஐபிஎல்லை நடத்த வேண்டும். மும்பை இந்தியன்ஸுக்காகவோ சிஎஸ்கேவுக்காகவோ தோனி - கோலிக்காகவோ எல்லாம் கிடையாது. ஐபிஎல்லை நம்பி ஏராளமானோரின் வாழ்வாதாரமே உள்ளது. அதற்காக ஐபிஎல்லை நடத்த வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக தனது சர்ச்சை கருத்துகளால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவந்த சஞ்சய் மஞ்சரேக்கரை அண்மையில்தான் பிசிசிஐ, வர்ணனையாளர் குழுவிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல்லில் வர்ணனை செய்வதும் சந்தேகம் தான்.