இந்திய அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர், ஒருசார்பான வர்ணனையில் தொடங்கி ஜடேஜா விவகாரம் வரை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறார். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஜடேஜா, முதல் 8 போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியில் தான் முதன்முறையாக ஆடும் லெவனில் இடம்பிடித்தார். ஆனாலும் அதற்கு முந்தைய போட்டிகளில் சப்ஸ்டிடியூட் ஃபீல்டராக பெரும் பங்காற்றினார். 

இந்நிலையில், ஜடேஜா குறித்து வர்ணனையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். துண்டு துணுக்கு(பிட்ஸ் அண்ட் பீஸஸ்) வீரருக்கெல்லாம் நான் ரசிகர் கிடையாது என்கிற ரீதியாக ஜடேஜா குறித்து பேசினார். அதற்கு ஜடேஜா தக்க பதிலடி கொடுத்தார். உங்களை(சஞ்சய் மஞ்சரேக்கர்)விட நான் அதிகமான போட்டிகளில் ஆடியுள்ளேன். எனவே கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார். 

இந்த சம்பவம் நடந்துமுடிந்துவிட்டது. அதன்பின்னர் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ள அணியை வெளியிட்ட சஞ்சய் மஞ்சரேக்கர், அதில் ஜடேஜாவை சேர்த்திருந்தார். ஆனால் அதன்பின்னர் தனது அணி என்று ஒன்றை தேர்வு செய்திருந்த மஞ்சரேக்கர் அதில் ஜடேஜாவை சேர்க்கவில்லை. 

இதைக்கண்ட மைக்கேல் வான், சும்மா இல்லாமல் மஞ்சரேக்கரை கலாய்க்கும் விதமாக, துண்டு துணுக்கு வீரரை அணியில் சேர்த்திருந்தீர்கள் போல.. இப்போ இல்லை என்று கிண்டலடித்திருந்தார். அதற்கு பதிலளித்த மஞ்சரேக்கர், ஜடேஜா இருந்தது அரையிறுதியில் களமிறங்க வாய்ப்புள்ள அணி. ஆனால் நான் தேர்வு செய்திருந்த அணியில் ஜடேஜா இல்லை என்று பதிலளித்திருந்தார். 

இப்படியாக இருவருக்கும் இடையேயான வார்த்தை போர் முற்ற, வர்ணனையிலும் சஞ்சய் மஞ்சரேக்கரை வச்சு செய்தார் மைக்கேல் வான். இந்நிலையில், மைக்கேல் வானின் மீதான கடுப்பில் சிறுபிள்ளைத்தனமாக அவரை டுவிட்டரில் ப்ளாக் செய்தார் மஞ்சரேக்கர். மஞ்சரேக்கர் தன்னை ப்ளாக் செய்ததையும், பிரேக்கிங் நியூஸ் என்று டுவிட்டரில் போட்டார் மைக்கேல் வான். மைக்கேல் வானுக்கு ஆதரவாகவும் மஞ்சரேக்கருக்கு எதிராகவும் டுவீட்டுகள் குவிகின்றன.