நியூசிலாந்துக்கு எதிரான முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்திய அணியில் ஒரு முக்கியமான மாற்றத்தை பரிந்துரைத்துள்ளார் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார்.
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று துபாயில் நடக்கிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 அணிகளுமே அவற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றன. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய இந்த 2 அணிகளும், இன்றைய போட்டியில் மோதுகின்றன. அதன்பின்னர் இந்த 2 அணிகளும் மோதும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுவிடும். எனவே இன்றைய போட்டி கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணி தான் பாகிஸ்தானுக்கு அடுத்த இடத்தை பிடித்து, க்ரூப் 2-ல் இடம்பெற்றிருக்கும் அணிகளில் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகம் பெறும்.
அந்தவகையில், இந்தியா - நியூசிலாந்து இடையேயான போட்டி இரு அணிகளுக்குமே கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டியை போன்றது. எனவே இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் களமிறங்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் வலுவானதாக இல்லை. ஹர்திக் பாண்டியா பந்துவீசாததால் 6வது பவுலிங் ஆப்சன் இல்லை. அதேபோல புவனேஷ்வர் குமாரின் பவுலிங் ஐபிஎல்லில் இருந்தே எடுபடாத நிலையில், ஷர்துல் தாகூரை எடுத்தால் பேட்டிங்கும் ஆடுவார் என்பதால் அது அணியின் காம்பினேஷனுக்கு வலுசேர்க்கும் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்காக தயாராகும்போது பயிற்சியில் ஹர்திக் பாண்டியா பந்துவீசியிருக்கிறார். எனவே அவர் இன்று ஒருசில ஓவர்கள் வீசுவார் என்பதால், 6வது பவுலிங் ஆப்சனாக திகழ்வார்.
இந்திய அணி குறித்த மற்றொரு விவாதம் அஷ்வினை சேர்க்காதது குறித்தது. மாயாஜால ஸ்பின்னராக மதிப்பிடப்பட்டு, அமீரகத்தில் நடந்த ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்ற வருண் சக்கரவர்த்தி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எந்த மாயாஜாலமும் செய்யவில்லை. 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் வழங்கிய வருணால் விக்கெட்டே வீழ்த்த முடியவில்லை.
வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்த சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடவைத்திருக்க வேண்டும் என்பதே பல முன்னாள் ஜாம்பவான்களின் கருத்து. அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பங்கார், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக அஷ்வினை ஆடவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் பங்கார், வருண் சக்கரவர்த்தி ஐபிஎல்லில் ஷார்ஜாவில் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் துபாயில் சரியாக பந்துவீசவில்லை. ஆனால் டி20 உலக கோப்பையில் இந்திய அணி துபாயில் தான் ஆடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் தான் நடக்கிறது. இந்த போட்டியின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். வருண் சக்கரவர்த்தி இப்போதுதான் சர்வதேச போட்டிகளில் ஆட ஆரம்பித்திருக்கிறார். இந்த போட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாதிரியான போட்டிகளில் ஆட நிதானமான மனநிலையும் அனுபவமும் அதிகம் தேவை. அந்தவகையில், என்னை பொறுத்தமட்டில் வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினைத்தான் ஆடவைக்க வேண்டும் என்பது என் கருத்து என சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
