இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஷோயப் மாலிக்கும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். காதல் எல்லைக்குள் அடங்காது என்பதை தங்களது காதல் மூலம் நிரூபித்து காட்டிய ஜோடி இது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்ஸாவின் துணிச்சலான முடிவை பலர் பாராட்டினாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்ததற்காக விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் அவையெல்லாம் அடங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மாலிக்கும் சானியாவும் மகிழ்ச்சியாக தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். 

எல்லை கடந்து இருவரும் திருமணம் செய்துகொண்டாலும், அந்த திருமணம் அவர்களது கெரியரை பாதிக்காத வகையில் அருமையாக முன்னெடுத்து சென்றனர். 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அவர்களுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. 

மாலிக் - சானியா மிர்ஸாவின் காதல் கதை அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில், ஷோயப் மாலிக்கை முதன்முதலில் சந்தித்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சானியா மிர்ஸா. 

இதுகுறித்து பேசிய சானியா மிர்ஸா, எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் விளையாட்டு வீரர்கள் என்ற வகையில் பொதுவாக தெரியுமே தவிர தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் ஒரு ஹோட்டலில் தான் முதலில் மாலிக்கை சந்தித்தேன். அந்த ஹோட்டலில் இருவரும் மோதிக்கொண்டோம். அது எதார்த்தமாக நடந்த சந்திப்புதான், விதிதான் அந்த சந்திப்புக்கு காரணம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், நான் அந்த ஹோட்டலில் இருக்கிறேன் என்று தெரிந்து திட்டமிட்டே ஷோயப் மாலிக் அங்கு வந்தார் என்பது பின்னர்தான் எனக்கு தெரிந்தது. எனவே அது விதியல்ல என்று, தனது காதல் கணவருடனான முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் சானியா மிர்ஸா.