கங்குலி தலைமையில் தான் இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு நகர்ந்தது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை கட்டமைத்து, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை வெற்றிநடை போடவைத்தவர். கங்குலி தலைமையில் இந்திய அணி, 2001-2002 காலக்கட்டத்தில் மிரட்டலான அணியாக வளர்ந்தது. 

கங்குலி களத்தில் ஆக்ரோஷமானவர். எதிரணி வீரர்களுக்கு பதிலடி கொடுப்பது, ஸ்லெட்ஜிங் என அனைத்து வகையிலும் ஆக்ரோஷமாக வழிநடத்தினார். கங்குலியின் கெரியரில் நடந்த மோதலில் முக்கியமானது, 2002 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இலங்கை வீரர் அர்னால்டுடனான மோதல்.

2002 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்தியாவும் இலங்கையும் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 222 ரன்கள் அடித்தது. 223 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி விரட்டும்போது, 9வது ஓவர் வீசும்போதே, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதனால் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்த போட்டியில் இலங்கை அணியின் பேட்டிங்கின் போது தான், அர்னால்டுக்கும் கங்குலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அர்னால்டு, பேட்டிங் ஆடும்போது, ஆடுகளத்தின் நடுவே ஓடினார். அதைக்கண்ட விக்கெட் கீப்பர் ராகுல் டிராவிட், அர்னால்டை கண்டித்தார். அதைக்கண்ட கேப்டன் கங்குலி, அர்னால்டை கண்டித்தார். கங்குலி எச்சரித்துவிட்டு சென்றபின்னரும், அர்னால்டு கங்குலியுடன் வாக்குவாதம் செய்யவே, கங்குலி மீண்டும் சென்று கண்டிக்க, வாக்குவாதம் முற்றிவிட்டது. அர்னால்டு செய்தது தவறு என்பதால், கங்குலி கோபமாக எச்சரித்தார். அதன்பின்னர் அம்பயர் டேவிட் ஷேபெர்டு, கங்குலியுடன் பேசினார். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அந்த வீடியோ இதோ..

இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பின்னர் கங்குலி, இலங்கை அணியின் டிரெஸ்ஸ்ங் ரூமிற்கு வந்து பேசியதாக, இலங்கை அணியின் அப்போதைய இளம் வீரரும் அதன்பின்னர் இலங்கை அணியை வழிநடத்திய முன்னாள் கேப்டனுமான குமார் சங்கக்கரா பேசியுள்ளார்.

அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள சங்கக்கரா, ஒருநாள் போட்டியில் ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கங்குலிக்கும் அர்னால்டுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த சம்பவம் குறித்து அம்பயர் ஷேபெர்டும் புகாரளித்தார். இதையடுத்து தாதா(கங்குலி) எங்கள் டிரெஸ்ஸிங் ரூமிற்கு வந்து எங்களுடன் பேசினார். இந்த பிரச்னையை பெரிதாக்கினால் தனக்கு தடை விதிக்கப்படலாம் என்றும், அதனால் இதை பெரிதாக்காமல் விடுமாறும் கேட்டுக்கொண்டார். நாங்களும் ஒப்புக்கொண்ட பின்னர் தாதா ஓகே ஆனார். நான் தாதாவுடன் கேப்டன்சி மற்றும் கிரிக்கெட் குறித்து நிறைய பேசியிருக்கிறேன் என்று சங்கக்கரா தெரிவித்தார்.