உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகளும் ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன. இந்த நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

உலக கோப்பை தொடரில் ஃபின்ச், வார்னர், ஷகிப் அல் ஹாசன், ஜோ ரூட், ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக ஆடிவருகின்றனர். இந்திய அணியின் தொடக்க வீரர்களே அதிகநேரம் களத்தில் நின்று சிறப்பாக ஆடுவதால் விராட் கோலிக்கு பெரிய இன்னிங்ஸ் ஆடும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் அவர் இன்னும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக சதமடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 88 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். 

உலக கோப்பை வரலாற்றில் நெருங்குவதற்கு கடினமான ஒரு சாதனையை இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்கக்கரா தன்வசம் வைத்துள்ளார். 2015 உலக கோப்பையில் வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து ஆகிய நான்கு அணிகளுக்கு எதிராகவும் அடுத்தடுத்து சதமடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 4 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை சங்கக்கரா படைத்தார். 

இந்த சாதனையை முறியடிப்பது எப்பேர்ப்பட்ட வீரருக்குமே எளிதல்ல. ஆனால் எல்லா சாதனைகளுமே ஒருநாள் முறியடிக்கப்படும். அப்படி தனது சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்று சாதனைக்கு சொந்தக்காரரான சங்கக்கராவே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சங்கக்கரா, தனது சாதனையை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க அல்லது சமன் செய்ய முடியும் என தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக சீரான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் விராட் கோலியால் மட்டுமே தனது சாதனையை சமன் செய்ய முடியும் என சங்கக்கரா நம்புகிறார்.