இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரில் படுமோசமாக சொதப்பியது. 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வியை அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. 

2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் படுகேவலமான பேட்டிங்கே. அணியின் இளம் வீரர்கள் முதல் சீனியர் வீரர்கள் வரை யாருமே சரியாக ஆடவில்லை. அனைத்து பேட்ஸ்மேன்களுமே சொதப்பியதன் விளைவாக, நான்கு இன்னிங்ஸ்களில் ஒன்றில் மட்டுமே 200 ரன்களை கடந்தது இந்திய அணி.

முதல் போட்டியில் மயன்க் அகர்வால் சிறப்பாக ஆடினார். ஆனால் அவர் இரண்டாவது போட்டியில் சரியாக ஆடவில்லை. விராட் கோலி, ரஹானே, புஜாரா, பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் என அனைவருமே பேட்டிங்கில் ஏமாற்றமளித்தனர். அதனால் முதல் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் தோற்று டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது இந்திய அணி.

இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆன நிலையில், அணி தேர்வையும் ரிதிமான் சஹாவின் புறக்கணிப்பையும் கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல்.

இந்திய அணியின் அனுபவமான விக்கெட் கீப்பர் சஹா. ஆனால் அவர் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் புறக்கணிக்கப்படுகிறார். இந்திய ஆடுகளங்களில் பந்துகள் நன்றாக திரும்பும் என்பதால், ஸ்பின் பவுலிங்கிற்கு விக்கெட் கீப்பிங் செய்வதற்கு சிறந்த விக்கெட் கீப்பர் தேவை. அதனால் ரிஷப் பண்ட்டை விட பன்மடங்கு விக்கெட் கீப்பிங் திறமையும் அனுபவமும் வாய்ந்த ரிதிமான் சஹா, இந்தியாவில் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்கப்படுகிறார். 

ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு பெரிதாக சாதகமாக இருக்காது என்பதாலும் வெளிநாடுகளில் விக்கெட் கீப்பிங்கை விட நன்றாக பேட்டிங் ஆடக்கூடிய ஒருவர் தேவை என்கிற வகையிலும் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ரிஷப் பண்ட் சேர்க்கப்படுகிறார். 

ரிதிமான் சஹாவை விட ரிஷப் பண்ட் நல்ல பேட்ஸ்மேன் என்பதாலேயே வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் ஆடவைக்கப்படுகிறார். ஆனால் அவர் நியூசிலாந்தில் படுமோசமாக பேட்டிங் ஆடினார். ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடவில்லை. 

இந்நிலையில், சஹாவை சேர்க்காததை விமர்சித்து பேசியுள்ளார் சந்தீப் பாட்டீல். இதுகுறித்து பேசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவரான சந்தீப் பாட்டீல், ரிஷப் பண்ட்டை முன்னிறுத்துவதன் மூலம் ரிதிமான் சஹாவின் கெரியருடன் விளையாடுகிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். சஹா தான் விக்கெட் கீப்பருக்கான எனது முதன்மையான தேர்வு. 

Also Read - ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த தோனி கூட இப்படி ஒரு ஹெலிகாப்டரை பறக்கவிட்டது இல்ல.. ரஷீத்தின் வேற லெவல் வீடியோ

ஏனெனில் அவர் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். அணியை பல இக்கட்டான சூழல்களில் அணியை காப்பாற்றியிருக்கிறார். அவரது பேட்டிங்கை நீங்களே ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? இதன் மூலம் அவரது நம்பிக்கையை சிதைக்கிறீர்கள். சிறப்பாக பேட்டிங் ஆடும் திறமையை கொண்டவர். அவரது திறமை, தகுதி குறித்து எனக்கு நன்றாக தெரியும். அவர் வெஸ்ட் இண்டீஸில் சதமடிக்கும்போது கூட நான் அங்குதான் இருந்தேன். அந்த இன்னிங்ஸை பார்த்திருக்கிறேன். அவர் திறமையானவர் என்று சஹாவிற்கு ஆதரவாக சந்தீப் பாட்டீல் பேசியுள்ளார்.