உலக கோப்பையில் சச்சின் செய்துவைத்திருக்கும் சாதனைக்கு ஆயுள் ரொம்ப கெட்டி.

உலக கோப்பை தொடர் நேற்றுடன் முடிந்தது. இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான கடும் போட்டி டிராவில் முடிந்தது. சூப்பர் ஓவரும் டிராவில் முடிந்ததால், அந்த போட்டியில் அதிக பவுண்டரி அடித்த இங்கிலாந்து அணி ஐசிசி விதிப்படி வெற்றி பெற்று கோப்பையையும் வென்றது. 

இந்த உலக கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து பேட்டிங்கில் பங்களிப்பு செய்ததோடு சிறப்பாக கேப்டன்சி செய்து தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை இறுதி போட்டிவரை இழுத்துவந்த வில்லியம்சனுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்தது ரோஹித் சர்மா தான். 648 ரன்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்தையும் 647 ரன்களுடன் வார்னர் இரண்டாமிடத்தையும் பிடித்தனர். ஷகிப் அல் ஹசன் 606 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். வங்கதேச அணி லீக் சுற்றுடனும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதியுடனும் வெளியேறியதால், ரோஹித், வார்னர், ஷகிப் ஆகிய மூவரும் அதற்கு மேல் ரன் குவிக்க முடியாமல் போனது. 

ஆனால் இறுதி போட்டியில் ஆடிய வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட்டுக்கு சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் இருவருமே அதை செய்யவில்லை. இறுதி போட்டிக்கு முன்னதாக ரூட் 549 ரன்களும் வில்லியம்சன் 548 ரன்களும் அடித்திருந்தனர். 2003 உலக கோப்பையில் சச்சின் அடித்த 673 ரன்கள்தான் ஒரு உலக கோப்பை தொடரில் ஒரு வீரர் குவித்த அதிகமான ரன்கள். எனவே இறுதி போட்டியில் ரூட் 125 ரன்களும் வில்லியம்சன் 126 ரன்களும் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அதனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனை தப்பியது. அரையிறுதியில் ரோஹித் சர்மா வெறும் 27 ரன்கள் அடித்திருந்தால் சச்சின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார் ரோஹித். எனவே சச்சின் டெண்டுல்கரின் சாதனைக்கு 2023ம் ஆண்டு வரை ஆபத்து இல்லை.