உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை முதல் அரையிறுதி போட்டிகள் தொடங்குகின்றன. 

மான்செஸ்டரில் நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 11ம் தேதி பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், இந்திய அணியில் ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்திய அணி 6வது பவுலருடன் களமிறங்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. 

பும்ரா, ஷமி/புவனேஷ்வர் குமார், சாஹல்/ஜடேஜா, குல்தீப், ஹர்திக் பாண்டியா என 5 பவுலர்களுடன் தான் இதுவரை இந்திய அணி களமிறங்கியுள்ளது. உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்ட தினேஷ் கார்த்திக்கிற்கு வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் தான் முதல் வாய்ப்பே வழங்கப்பட்டது. 

கேதர் ஜாதவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். தினேஷ் கார்த்திக்கை 7ம் வரிசையில் இறக்கும் எண்ணத்தில் அணி நிர்வாகம் உள்ளது. தினேஷ் கார்த்திக் தனது ரோல் குறித்து பேசும்போது இந்த தகவலை உறுதி செய்திருந்தார். 

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் 7ம் வரிசையில் தான் இறங்கப்போகிறார் என்றால் அவரை அணியில் எடுக்க தேவையில்லை. அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்க்கலாம். ஜடேஜா நல்ல தேர்வாக இருப்பார். ஜடேஜாவை சேர்ப்பதன் மூலம் 6வது பவுலிங் ஆப்சன் கிடைக்கும் என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவரை எடுக்க வேண்டும் என சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.