வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடத்தப்பட்டு வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அவர்களின் வாயை அடைக்கும் வகையில் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவர முனையும் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 2 மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியும், அப்போது வெடித்த வன்முறையும், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது.

விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச அளவில் பிரபலங்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். வெளிநாட்டை சேர்ந்த பிரபல பாடகியும், கலைஞருமான ரிஹானா, ”இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை” என்று டுவீட் செய்திருந்தார். அவரது டுவீட்டுக்கு எதிராகவும் ஆதரவாகவும் இந்தியர்கள் பலர் டுவீட் செய்திருந்தனர்.
அதேபோல ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் க்ரெட்டா துன்பெர்க்கும், விவசாயிகள் போராட்டம் குறித்து, இந்திய விவசாயிகள் போராட்டத்தில் நாங்களும் துணை நிற்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். இதேபோல் வெளிநாட்டை சேர்ந்த பல பிரபலங்கள், விவசாயிகள் போராட்டம் குறித்து போட்ட டுவீட்டுகள், சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
”இந்திய இறையாண்மையில் சமரசம் செய்துகொள்ள முடியாது. அந்நிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்களுக்கு தெரியும். இந்தியாவிற்கானதை இந்தியாவே முடிவு செய்துகொள்ளும். இந்தியர்களாக இணைந்திருப்போம்” என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
