உலக கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன்மூலம் இங்கிலாந்து அணியின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது. 

உலக கோப்பை முடிந்துவிட்ட நிலையில், இந்த உலக கோப்பையின் சிறந்த 11 வீரர்களாகத் தான் கருதும் வீரர்களை உள்ளடக்கிய அணியை தேர்வு செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். 

அந்த அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா தான் இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர். 648 ரன்களை குவித்த ரோஹித்தையும் 532 ரன்களை குவித்த பேர்ஸ்டோ ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

மூன்றாம் வரிசை வீரராக உலக கோப்பையில் தொடர் நாயகன் விருதை வென்ற வில்லியம்சனையும் நான்காம் வரிசைக்கு கோலியையும் தேர்வு செய்துள்ளார். வில்லியம்சன் 578 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார். ஆனால் விராட் கோலிக்கு எதிர்பார்த்த அளவிற்கு இந்த உலக கோப்பை சிறப்பானதாக அமையவில்லை. வழக்கமாக சதங்களை வாரிக்குவிக்கும் கோலி, இந்த உலக கோப்பையில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. 

அதன்பினன்ர் 4 ஆல்ரவுண்டர்களை தேர்வு செய்துள்ளார் சச்சின். ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய நால்வரையும் தேர்வு செய்துள்ளார். ஷகிப் அல் ஹசனுக்கு இந்த உலக கோப்பை சிறப்பானதாக அமைந்தது. 8 போட்டிகளில் 606 ரன்கள் அடித்ததோடு 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றதற்கே பென் ஸ்டோக்ஸ் தான் காரணம். அவரைப்பற்றி இதைவிட வேறு எதுவும் சொல்ல தேவையில்லை. 

ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தான் சச்சின் டெண்டுல்கரின் சர்ப்ரைஸ் சாய்ஸ். ஏனெனில் பாண்டியா பெரியளவில் ஆடவில்லை. ஜடேஜா இரண்டே போட்டிகளில் தான் ஆடினார். அதை வைத்து சச்சின் எடுத்திருப்பது பெரிய ஆச்சரியம்தான். கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் கேரி ஆகிய வீரர்கள் உலக கோப்பையில் அசத்தியுள்ளனர். அவர்களை சச்சின் ஓரங்கட்டிவிட்டார். 

ஃபாஸ்ட் பவுலர்களாக மிட்செல் ஸ்டார்க், பும்ரா மற்றும் ஆர்ச்சர் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் இவர்கள் மூவரும் உலக கோப்பையில் எதிரணிகளை தெறிக்கவிட்டனர். 

இந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சனை சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். கோலி அணியில் இருந்தும் கூட அவரை கேப்டனாக தேர்வு செய்யவில்லை. உலக கோப்பை தொடர் முழுவதுமே வில்லியம்சனின் கேப்டன்சி அபாரமாக இருந்துள்ளது. எனவே சச்சின், வில்லியம்சனை கேப்டனாக தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. 

சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த 2019 உலக கோப்பையின் சிறந்த அணி:

ரோஹித் சர்மா, பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன்(கேப்டன்), விராட் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஆர்ச்சர்.