சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான ஸ்மித், ஆஷஸ் தொடரில் செம கம்பேக் கொடுத்தார். 7 இன்னிங்ஸ்களில் 774 ரன்களை குவித்து மிரட்டிய ஸ்மித், ஆஸ்திரேலிய அணி பெற்ற 2 வெற்றிகளுக்கும் காரணமாக திகழ்ந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

ஒன்றரை ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிவைத்து, ஒரே தொடரில் முதலிடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத்தள்ளிவிட்டு முதலிடத்தை பிடித்துவிட்டார் ஸ்மித். ஆஷஸ் தொடரில் அவரது பேட்டிங் அபாரமாக இருந்தது. அவரை வீழ்த்துவதே இங்கிலாந்துக்கு பெரிய கஷ்டமாகிவிட்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அவர் தான் திகழ்ந்தார். ஸ்மித்தின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இந்த தொடரில் ஆடிய இன்னிங்ஸ்களும் அடங்கும். ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார். அந்தளவிற்கு தொடர்ச்சியாக அடித்து ரன்களை குவித்தார். 

ஆஷஸ் தொடரில் முழுக்க முழுக்க இங்கிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடினார் ஸ்மித். ஸ்மித்தை பலரும் புகழ்ந்துவரும் நிலையில், அவரது பேட்டிங் டெக்னிக் படுமோசமாக உள்ளது என்ற விமர்சனங்களும் உள்ளன. ஆனால் ஆஷஸ் தொடருக்கு இடையே ஸ்மித்தை டுவிட்டரில் பாராட்டியிருந்தார் சச்சின் டெண்டுல்கர். ”சிக்கலான பேட்டிங் டெக்னிக்.. ஒழுங்கான தெளிவான மனநிலை ஆகியவை தான் ஸ்மித்தை வேற லெவலுக்கு கொண்டுசெல்கிறது. செம கம்பேக்” என்று ஸ்மித்தை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியிருந்தார். 

தற்போது அதற்கான விளக்கத்தையும் ஸ்மித்தை இங்கிலாந்து அணியால் எளிதில் வீழ்த்த முடியாததற்கான காரணத்தையும் சச்சின் டெண்டுல்கர், டுவிட்டரில் ஒரு வீடியோ மூலம் விளக்கியுள்ளார். 

”முதல் போட்டியில் ஸ்மித்தை ஸ்லிப் கேட்ச் மூலம் வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் திட்டமிட்டனர். ஆனால் லெக் ஸ்டம்பை முழுமையாக விட்டுவிட்டு ஆஃப் திசையில் நகர்ந்த ஸ்மித், மிகக்கவனமாக தேவையில்லாத பந்துகளை அடிக்காமல் விட்டார். அதனால் இங்கிலாந்து பவுலர்களின் திட்டம் பலனளிக்கவில்லை. இவ்வாறு முதல் போட்டியில் இங்கிலாந்து பவுலர்களை எதிர்கொண்டார் ஸ்மித். 

 இரண்டாவது போட்டியில் ஸ்மித்திற்கு லெக் ஸ்லிப், லெக் கல்லி ஃபீல்டிங்கை செட் செய்துவிட்டு ஆர்ச்சர் பவுன்ஸர்களை வீசினார். காலை பின்னால் நகர்த்தி பேட்டை முகத்திற்கு நேராக தூக்கி அதை தடுத்தாட முயன்றார் ஸ்மித். அப்படி செய்ததால் அவரால் பந்தை சரியாக பார்க்கமுடியவில்லை என்பதால் அடி வாங்கிவிட்டார். அதுதான் தவறாகிவிட்டது. பொதுவாக பேட்ஸ்மேன்களின் தலை முன்னோக்கி வந்து பந்தின் திசைக்கு நேராக இருந்தால் பவுன்ஸர்களை மிஸ் செய்வது எளிதாக இருக்கும். ஆனால் ஸ்மித் பின்னோக்கி நகர்ந்ததால் இரண்டாவது போட்டியில் பவுன்ஸரை எதிர்கொள்ள திணறினார். 

ஆனால் தனது தவறுகளை திருத்தி பேட்டிங் டெக்னிக்கில் மாற்றத்தை கொண்டுவந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் பவுன்ஸர்களை சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி இரண்டு போட்டிகளில் அவரது தலை முன்னோக்கி நகர்ந்தது. பந்தை நன்றாக கவனித்து தனது தோள்பட்டைக்கு மேல் பவுன்ஸர்களை விட்டார். இரண்டாவது போட்டியில் செய்த தவறை திருத்தி கடைசி 2 போட்டிகளில் நன்றாக ஆடினார். வழக்கமாக லெக் ஸ்டம்ப்பை விட்டு விலகிவந்து ஆடும் ஸ்மித், லெக் திசையில் ஸ்லிப் ஃபீல்டர் நிறுத்தியிருந்த சமயத்தில் அவரது இடது காலை லெக் ஸ்டம்ப்பில் இருந்து நகற்றவே இல்லை. இவ்வாறு பவுலர்களின் திட்டத்திற்கு ஏற்ப சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பேட்டிங் ஆடினார் ஸ்மித். அதனால் தான் சிக்கலான பேட்டிங் டெக்னிக். ஆனால் ஒருங்கிணைந்த மனநிலை என்று ஸ்மித்தை பாராட்டியிருந்தேன்” என்று சச்சின் டெண்டுல்கர் விளக்கியுள்ளார்.