மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மாபெரும் கிரிக்கெட் வீரர். கிரிக்கெட் உலகில் காலத்தால் அழியாத வரலாறு அவர். 24 ஆண்டுகள் அசைக்கமுடியாத ஜாம்பவானாக வலம்வந்தவர். 

அதிக சதங்கள், அதிக ரன்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியவர் சச்சின். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் மகனும் கிரிக்கெட் வீரராகவே உருவெடுத்துள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை டி20 லீக் தொடரில் ஆகாஷ் டைகர்ஸ் அணிக்காக ஆடிவருகிறார். 

பொதுவாக கிரிக்கெட் வீரர்களின் வாரிசுகளும் கிரிக்கெட் வீரராக இருந்தால் அணியில் எளிதாக வாய்ப்பு கிடைத்துவிடும், அவர்களுக்கு கூடுதல் சலுகைகள் இருக்கும் என்ற எண்ணம் பொதுவெளியில் எழுவது இயல்புதான். அப்படியான எண்ணங்கள் பொதுவெளியில் எழுவதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. 

மற்ற வீரர்களின் வாரிசுகளுக்கே அப்படியென்றால், சச்சின் டெண்டுல்கரின் மகன் என்றால் சொல்லவா வேண்டும் என்ற கருத்து பரவலாக இருக்கத்தான் செய்யும். அதை தகர்க்கும் வகையில், தனது மகனாக இருந்தாலும் அதை பயன்படுத்தி வாய்ப்பு வாங்கிக்கொடுக்கும் ஆள் நான் இல்லை என்பதை பறைசாற்றும் விதமாக சச்சின் டெண்டுல்கர் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். 

எந்த பணியில் எந்த துறையில் இருந்தாலும் சரி.. ஆனால் குறுக்கு வழியில் மட்டும் போகக்கூடாது என்று என் தந்தை எனக்கு சொன்ன அறிவுரையைத்தான், நான் என் மகன் அர்ஜுனுக்கு சொல்லியிருக்கிறேன் என்று சச்சின் தெரிவித்தார். இதன்மூலம் தனது செல்வாக்கை வைத்து மகனை வளர்த்துவிட மாட்டேன் என்பதை சச்சின் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.