Asianet News TamilAsianet News Tamil

RR vs CSK: சிஎஸ்கேவை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்..! புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் RR

சிஎஸ்கேவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பிளே ஆஃபிற்கு முன்னேறியது.
 

rr beat csk and qualified for ipl 2022 play off
Author
Mumbai, First Published May 20, 2022, 11:08 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸும் சிஎஸ்கேவும் மோதிய போட்டி மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்தது. இந்த சீசனில் இரு அணிகளுக்குமே இதுதான் கடைசி லீக் போட்டி. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளுமே தலா ஒரு மாற்றங்களுடன் களமிறங்கியது. சிஎஸ்கே அணியில் ஷிவம் துபேவுக்கு பதிலாக அம்பாதி ராயுடுவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜிம்மி நீஷமுக்கு பதிலாக ஷிம்ரான் ஹெட்மயரும் சேர்க்கப்பட்டனர்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஜெகதீசன், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), மிட்செல் சாண்ட்னெர், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், மதீஷா பதிரனா, முகேஷ் சௌத்ரி.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவி அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், ஒபெட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா.

முதலில் பேட்டிங் ஆடிவரும் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், டிரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்திலேயே வெறும் 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 3ம்வரிசையில் இறங்கிய மொயின் காட்டடி அடித்து 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் அடித்த சிஎஸ்கே அணியின் 2வது வீரர் என்ற சாதனையை மொயின் அலி படைத்தார். 

மொயின் அலியின் அதிரடியால் 6 ஓவரில் 73 ரன்களை குவித்தது. ஆனால் 8வது ஓவரில் டெவான் கான்வே ஆட்டமிழந்தபிறகு, ஜெகதீசன் ஒரு ரன்னிலும், ராயுடு 3 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணியின் ஸ்கோர் வேகம் குறைந்தது. மொயின் அலி 57 பந்தில் 93 ரன்களை குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே தொடங்கிய வேகத்திற்கு 200 ரன்களுக்கு மேல் சென்றிருக்க வேண்டும். ஆனால் ராஜஸ்தான் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி ஸ்கோரை கட்டுப்பத்தினர். 20 ஓவரில் 150  ரன்கள் மட்டுமே அடித்தது சிஎஸ்கே அணி.

151 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். பட்லர் (2), சாம்சன் (15), படிக்கல்(3) ஆகியோர் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலும்59 ரன்களில் ஆட்டமிழக்க, ஹெட்மயர் 6 ரன்னில் அவுட்டாக, ராஜஸ்தான் மீது அழுத்தம் அதிகரித்தது. ஆனால் பொறுப்புடன் ஆடிய அஷ்வின் 23 பந்தில் 40 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி 18 புள்ளிகளை பெற்று, நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் லக்னோவை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios