உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் தென்னாப்பிரிக்க அணியும் ஆடிவருகின்றன. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் பவுலிங் தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருந்தபோதிலும், வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய பணித்தார் டுபிளெசிஸ்.

தொடக்கத்திலேயே அடித்து ஆடி எதிரணியை தெறிக்கவிடக்கூடிய ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் இறங்கினர். இங்கிலாந்து அணியை ஆரம்பத்தில் விட்டுவிட்டால் அந்த அணியின் ஸ்கோரை கட்டுப்படுத்துவது கடினம். அதையறிந்த தென்னாப்பிரிக்க கேப்டன், முதல் ஓவரிலேயே இங்கிலாந்து அணிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். 

முதல் ஓவரை வீசப்போவது ரபாடாவா இங்கிடியா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னர் இம்ரான் தாஹிரிடம் முதல் ஓவரை கொடுத்தார் டுபிளெசிஸ். தனது கேப்டனின் நம்பிக்கையை வீணடிக்காத தாஹிர், அபாயகரமான வீரரான பேர்ஸ்டோவை இரண்டாவது பந்திலேயே வீழ்த்தினார். இம்ரான் தாஹிர் வீசிய முதல் பந்தில் ராய் சிங்கிள் தட்ட, இரண்டாவது பந்தில் கோல்டன் டக் ஆகி வெளியேறினார் பேர்ஸ்டோ. இதையடுத்து ராயுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 

முதல் ஓவரிலேயே அதிரடி மற்றும் நட்சத்திர வீரரான பேர்ஸ்டோவின் விக்கெட்டை இழந்தபோதிலும், அதற்கெல்லாம் அசராத ரூட்டும் ராயும் ரன்ரேட் குறையாத வகையில் சிறப்பாக ஆடிவருகின்றனர். ராயும் ரூட்டும் இணைந்து ரபாடா, இங்கிடி, இம்ரான் தாஹிர் என யாருடைய ஓவரையும் விட்டுவைக்கவில்லை. அனைவரின் பவுலிங்கிலும் பவுண்டரிகளை விளாசி ரன்களை குவித்துவருகின்றனர்.

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பேர்ஸ்டோவின் விக்கெட்டை இழந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ராய் மற்றும் ரூட் ஆகிய இருவருமே அரைசதம் அடித்து அபாரமாக ஆடிவருகின்றனர்.