ஐபிஎல் 12வது சீசனிலும் டைட்டிலை வென்று நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. நான்கு முறையுமே ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. 

ரோஹித் சர்மாவின் கேப்டன்சியும் ஐபிஎல்லில் மும்பை அணியின் ஆதிக்கத்துக்கு முக்கியமான காரணம். களவியூகம், பவுலிங் சுழற்சி, வீரர்களை கையாளும் விதம், நெருக்கடியான சூழலில் தீட்டும் திட்டங்கள் என அனைத்திலுமே ரோஹித் சிறப்பாக செயல்படக்கூடியவர். 

நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் ஐபிஎல் இறுதி போட்டியில் நேற்று மோதின. இந்த போட்டியில் வெறும் 150 ரன்களைத்தான் சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். ஆனாலும் அதை எடுக்கவிடாமல் தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். 

வீரர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை சிறு சிறு தவறுகளுக்காக ஓரங்கட்டாமல், அவர்களுக்கு ஆட்டத்தில் மேலும் ஈடுபாட்டை அதிகரித்து சிறந்த ஆட்டத்தை வீரர்களிடமிருந்து வெளிக்கொண்டு வருபவர் ரோஹித் சர்மா. 

அதைத்தான் நேற்றைய போட்டியிலும் செய்தார். இக்கட்டான சூழலில் 16வது ஓவரில் 20 ரன்களை மலிங்கா விட்டுக்கொடுத்த போதிலும் அவரது அனுபவத்தையும் அவர் ஒரு மேட்ச் வின்னர் என்பதையும் கருத்தில்கொண்டு அவரிடமே கடைசி ஓவரை கொடுத்தார் ரோஹித் சர்மா. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு மும்பை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் மலிங்கா. 

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ரன் அவுட்டானதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. மலிங்கா விட்ட ஓவர் த்ரோவால் தான் தோனியின் விக்கெட் விழுந்தது. 13வது ஓவரின் 5வது பந்தை வாட்சன் அடிக்க, அதை பிடித்த மலிங்கா, ரன் ஓடி முடிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாமல் ஓவர் த்ரோ விட்டார். அதை லாங் ஆஃப் திசையில் இருந்த இஷான் கிஷான் ஓடிவந்து பிடித்து நேரடியாக ஸ்டம்பில் அடித்தார். 

மலிங்கா ஓவர் த்ரோ விட்டதால் தோனி இரண்டாவது ரன் ஓடினார். இதனால் அதிருப்தியடைந்த கேப்டன் ரோஹித், மலிங்காவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அடுத்த நொடியிலேயே இஷான் கிஷான் ஸ்டம்பில் அடித்ததும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனாலும் அது அவுட்டா இல்லையா என்பது தெரியாததால், மீண்டும் மலிங்காவிடம் என்ன ஆச்சு? என அதிருப்தியுடன் கேள்வி எழுப்பினார். ஆனால் நல்ல வேளையாக அந்த ஓவர் த்ரோவால் தோனியின் விக்கெட் விழுந்தது.