200, 250ஆவது ஐபிஎல் போட்டியில் சொதப்பிய ரோகித் சர்மா, 26, 36ல் அவுட்!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா இன்று தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி 36 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 33ஆவது ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்கிறது. இதில், ரோகித் சர்மா தனது 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார்.
இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவுடன் இணைந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து 23ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார்.
ஆனால், ரோகித் சர்மா பெரிதாக ஒன்றும் இந்தப் போட்டியில் சோபிக்கவில்லை. அவர், 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 28 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் 6500 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 3 சிக்ஸர் அடித்ததன் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த, கெரான் போலார்டின் 223 சிக்ஸர்கள் சாதனையை முறியடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா 224 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா 104 சிக்ஸர்கள், இஷான் கிஷான் 103 சிக்ஸர்கள், சூர்யகுமார் யாதவ் 99 சிக்ஸர்கள் விளாசியுள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த 8ஆவது ஐபிஎல் போட்டியின் மூலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தனது 200ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 12 பந்துகளில் 3 சிக்ஸர், ஒரு பவுண்டரி உள்பட 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 277/3 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 246/5 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோலிவி அடைந்தது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா கடைசி வரை நின்று சதம் அடித்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.