உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் ஆடிவருகின்றன. 

மான்செஸ்டரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய அதே அணியுடன் தான் இந்திய அணி ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் பொறுமையாகவே தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் அமைதி காத்த ரோஹித் சர்மா, கீமார் ரோச் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது டிரேட்மார்க் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் அபாரமான ஒரு சிக்ஸரை விளாசினார். அதே ஓவரிலேயே ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 

இதையடுத்து கோலியும் ராகுலும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த வேளையில், 48 ரன்கள் அடித்த ராகுலை கிளீன் போல்டாக்கி அனுப்பினார் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர். ராகுலை தொடர்ந்து விஜய் சங்கர் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். 140 ரன்களுக்கு இந்திய அணி  4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கோலியும் தோனியும் ஆடிவருகின்றனர்.

இந்த போட்டியில் ரோஹித் சர்மாவின் விக்கெட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோச் வீசிய ஆறாவது ஓவரின் கடைசி பந்து ரோஹித்தின் பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் ரிவியூ எடுத்தது. 

ரீப்ளேவில் எளிதாக கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் க்ளோசாக இருந்தது. பேட்டும் கால்காப்பும் ஒரே நேர்கோட்டில் இருந்ததால் பந்து பேட்டில் முதலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதை கண்டறிய மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் தேர்டு அம்பயர் மைக்கேல் காஃப் அவுட் கொடுத்துவிட்டார். இதையடுத்து அந்த அம்பயரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெறிக்கவிடுகின்றனர். ரோஹித் அவுட்டாகி சென்றபோது அதிருப்தியுடனேயே சென்றார். ரோஹித்தின் மனைவியும் அதிர்ச்சியடைந்தார். என்னது என் கணவர் அவுட்டா? என்ற ரீதியாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். அது வைரலாகிவருகிறது.