உலக கோப்பை தொடரில் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

இந்த உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் சிறப்பானதாக அமைந்துள்ளது. இதுவரை ஆடிய 8 இன்னிங்ஸ்களில் 5 சதங்களுடன் 647 ரன்களை குவித்துள்ளார் ரோஹித் சர்மா. 

5 சதங்கள் விளாசி ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ள, ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின்(673 ரன்கள்) சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், களத்தின் தன்மை, பவுலர்களின் சூட்சமம் அனைத்தையும் நன்கு உள்வாங்கி களத்தில் நிலைத்த பின்னர் தாறுமாறாக அடித்து நொறுக்கக்கூடியவர். இந்த உலக கோப்பையில் தொடக்கம் முதலே அடித்து ஆடுகிறார். 

எந்த பந்து போட்டாலும் அதற்கான ஷாட்டுகளுடன் தயாராக இருக்கிறார் ரோஹித் சர்மா. கவர் டிரைவ்கள், ஸ்டிரைட் டிரைவ்கள், புல் ஷாட், கட் ஷாட், ஃப்ளிக் ஷாட் என அனைத்து ஷாட்டுகளையும் மிக நேர்த்தியாக ஆடிவருகிறார். 

இலங்கைக்கு எதிரான ஆட்டநாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா பின்னர் பேசும்போது தனது பேட்டிங் குறித்து பேசினார். ஷாட் செலக்‌ஷன் ரொம்ப முக்கியம். குறிப்பிட்ட ஆடுகளத்தில் என்ன மாதிரியான ஷாட் ஆட வேண்டும், எந்த பவுலரை எப்படி ஆட வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் என் மனதுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.