டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 148 ரன்கள் அடித்தது. வங்கதேச அணியின் சீனியர் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீமின் அபாரமான பேட்டிங்கால் அந்த அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு முதல் டி20 வெற்றியை பெற்று சாதனையையும் படைத்தது. 

ஏற்கனவே ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், லெஜண்ட் விக்கெட் கீப்பரான தோனியுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் அசிங்கப்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவுட்டே இல்லாததற்கு டி.ஆர்.எஸ் எடுக்கும்படி ரோஹித்திற்கு வலியுறுத்தி வாங்கிக்கட்டி வருகிறார் ரிஷப் பண்ட். 

வங்கதேச இன்னிங்ஸின் 10வது ஓவரின் கடைசி பந்தை சௌமியா சர்க்கார் எதிர்கொண்டார். சாஹல் வீசிய அந்த பந்தை, சர்க்கார் அடிக்காமல் விட, பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டின் கைகளுக்கு சென்றது. கேட்ச்சிற்கு அப்பீல் செய்தார் ரிஷப். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட, கேப்டன் ரோஹித்திடம் ரிவியூ எடுக்கும்படி வலியுறுத்தினார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் மிகவும் நம்பிக்கையுடன் உறுதியாக ரிவியூ எடுக்க சொன்னதால் ரோஹித்தும் ரிவியூ எடுத்தார். ஆனால் பந்து பேட்டில் படவே இல்லை. 

அதனால் இந்திய அணி ரிவியூவை இழந்தது. இதையடுத்து ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட்டை பார்த்து கொடுத்த ஒரு ரியாக்‌ஷன் வலைதளங்களில் வைரலாகிவருகிறது. உன்னையெல்லாம் வச்சுகிட்டு என்னடா பண்றது? என்கிற ரீதியில் தலையில் அடித்து சிரித்துக்கொண்டார் ரோஹித். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.