உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் ஆடிவருகின்றன. 

மான்செஸ்டரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஆடிய அதே அணியுடன் தான் இந்திய அணி ஆடிவருகிறது. 

தொடக்க வீரர்கள் ரோஹித்தும் ராகுலும் நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் பொறுமையாகவே தொடங்கினர். முதல் 5 ஓவர்களில் அமைதி காத்த ரோஹித் சர்மா, கீமார் ரோச் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தில் தனது டிரேட்மார்க் ஷாட்டான புல் ஷாட்டின் மூலம் அபாரமான ஒரு சிக்ஸரை விளாசினார். 

சிக்ஸருக்கு அடுத்த பந்தை ரோஹித் சிங்கிள் தட்ட, அடுத்த பந்தில் ராகுல் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். நிதானமாக தொடங்கி ஆறாவது ஓவரில் இருவரும் அதிரடியை கையில் எடுத்த  மாத்திரத்திலேயே அதே ஓவரின் கடைசி பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். ரோச் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்து ரோஹித்தின் பேட்டுக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அப்பீல் செய்ய அம்பயர் மறுத்துவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணி நம்பிக்கையுடன் ரிவியூ எடுத்தது. அவர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. அந்த பந்து பேட்டை உரசிச்சென்றதால் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 

ரோஹித் சர்மா 18 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுலுடன் கோலி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.