இந்திய ஒருநாள் மற்றும் அணியின் தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக செயல்பட்டது. இருவரும் நிறைய போட்டிகளில் தொடக்க வீரர்களாக ஆடியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் இடையே அபாரமான புரிதல் இருந்தது. 

இந்நிலையில், அண்மைக்காலமாக மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடி சொதப்பிவருகிறார் தவான். எனவே தவானை நீக்கிவிட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ரோஹித்துடன் ராகுலை தொடக்க வீரராக இறக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அப்படியான சூழலில், அதற்கான வாய்ப்பை தவானே ஏற்படுத்தி கொடுத்தார். சையத் முஷ்டாக் அலி தொடரில் தவான் காயமடைந்ததால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் ஆகிய இரண்டு தொடர்களிலிருந்தும் விலகினார். 

எனவே இரண்டு தொடர்களிலுமே ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கும் வாய்ப்பை பெற்றார் ராகுல். டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி நல்ல ஸ்கோர் செய்து, நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஒருநாள் போட்டியிலும் சிறப்பாக ஆடிவருகிறார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சோபிக்காத நிலையில், இரண்டாவது போட்டியில் அபாரமாக ஆடினார்கள். விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித்தும் ராகுலும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 

பவுலிங்கிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கத்திலேயே, 288 ரன்கள் என்ற சவாலான இலக்கை அசால்ட்டாக விரட்டி வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. எனவே பேட்டிங்கிற்கு சாதகமான விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் கண்டிப்பாக 350 ரன்களே போதாது. அதுமட்டுமல்லாமல் விசாகப்பட்டினம் மைதானமும் சிறியது. எனவே மெகா ஸ்கோரை அடித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து, ரோஹித்தும் ராகுலும் மெகா ஸ்கோரை அடிப்பதற்கான சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அபாரமாக ஆடி சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்து கொடுத்தனர். 

ரோஹித்தும் ராகுலும் அவசரப்படாமல் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடி, ஸ்கோர் செய்தனர். ஷாட் செலக்‌ஷனில் மிகவும் கவனமாக இருந்த இருவரும், தங்களது டிரேட்மார்க் ஷாட்டுகளை தெளிவாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். அரைசதத்திற்கு பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, ராகுலுக்கு முன்பாக சதத்தை எட்டினார். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை பதிவு செய்தார் ரோஹித் சர்மா. ரோஹித்தை தொடர்ந்து சதமடித்த ராகுல், 102 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 159 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை குவித்து சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர் ரோஹித்தும் ராகுலும். அதை பயன்படுத்தி, 45வது ஓவருக்கு மேல் தாறுமாறாக அடித்து ஆடி, இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிஷப் பண்ட்டும். ஷ்ரேயாஸ் மற்றும் ரிஷப்பின் கடைசி நேர அதிரடியால் இந்திய அணி 387 ரன்களை குவித்து, வெஸ்ட் இண்டீஸை 280 ரன்களில் சுருட்டி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 227 ரன்களை சேர்த்ததன் மூலம், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை சேர்த்த தொடக்க ஜோடி என்ற சாதனையை ரோஹித் - ராகுல் ஜோடி படைத்துள்ளது. இதற்கு முன்னதாக 2002ல் ராஜ்கோட்டில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், கங்குலியும் சேவாக்கும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 196 ரன்களை குவித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை முறியடித்து தற்போது ரோஹித் - ராகுல் ஜோடி புதிய சாதனையை படைத்துள்ளனர்.