நடப்பு உலக கோப்பை தொடர் இந்திய அணிக்கு மிகச்சிறப்பானதாக அமைந்துள்ளது. 

லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு போட்டியில் மட்டுமே தோற்று 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அவை இரண்டிலுமே இந்திய அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த உலக கோப்பையில் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதங்களை குவித்துவருகிறார். 

இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை விளாசி, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். லீக் சுற்று முடிந்துள்ள நிலையில், ரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். 

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அந்த போட்டியிலேயே இந்த சாதனையை ரோஹித் முறியடிக்க வாய்ப்புள்ளது.