ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோஹித் சர்மா திகழ்கிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற அபார சாதனைகளோடு ஜாம்பவனாக வலம்வருகிறார் ரோஹித் சர்மா.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக ஆடிவருகிறார். தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிராக சதமடித்து அசத்தினார். 

சிக்ஸர் விளாசுவதில் வல்லவரான ரோஹித் சர்மா, 224 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அஃப்ரிடி(351 சிக்ஸர்கள்), கெய்ல்(318 சிக்ஸர்கள்), ஜெயசூர்யா(270 சிக்ஸர்கள்), தோனி(225 சிக்ஸர்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக 5வது இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் ரோஹித் சர்மா 2 சிக்ஸர்கள் அடித்திருந்தால் தோனியை பின்னுக்கு தள்ளியிருக்கலாம். ஆனால் ஒரே ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்த ரோஹித், தோனியின் சிக்ஸர் சாதனையை முறியடிக்காமல் வெளியேறினார்.