நாக்பூரில் நடந்த இந்த போட்டியில் 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் நைமும் மிதுனும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 98 ரன்களை குவித்தனர். அவர்கள் ஆடும்போது இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்படியான சூழலில் மிதுனின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்த தீபக் சாஹர், அதன்பின்னர் தனது விக்கெட் வேட்டையை தொடர்ந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் ஷிவம் துபேவும் நன்றாக வீசி தன் பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாஹர் மற்றும் ஷிவம் துபேவின் அபாரமான பவுலிங்கின் விளைவாக இந்திய அணி வெற்றி பெற்றது. 

முகமது நைமும் முகமது மிதுனும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியபோது இந்திய வீரர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். வீரர்களின் நம்பிக்கையின்மையை கண்ட கேப்டன் ரோஹித் சர்மா, அவர்களை அழைத்து சில நொடிகள் பேசி, உத்வேகப்படுத்தி அனுப்பினார். அதன்பின்னர் தான் நம்பிக்கையுடன் ஆடியுள்ளனர் இந்திய வீரர்கள். 

வீரர்களிடம் பேசியது குறித்து போட்டிக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, போட்டியின் இடையே ஜெர்சியில் இருக்கும் சின்னத்தை காட்டி, நாட்டுக்காக நாம் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டினேன் என்றார். 

ரோஹித் சர்மா வீரர்களை அழைத்து உத்வேகமளித்தது குறித்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், நாங்கள்(வீரர்கள்) ஒரு கட்டத்தில் மிகுந்த அழுத்தத்தில் இருந்தோம். ஆரம்பத்தில் நாம் கொஞ்சம் அசால்ட்டாக இருந்ததால் வங்கதேச வீரர்கள் நல்ல தொடக்கத்தை அமைத்துவிட்டனர். இதையடுத்து அழுத்தம் அதிகரித்தது. உடனடியாக வீரர்கள் அனைவரையும் அழைத்து பேசினார் ரோஹித். அதன்பின்னர் தான் அனைவரும் உத்வேகத்துடன் ஆடி வெற்றியை உறுதி செய்தோம் என்று ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.