உலக கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடக்கவிருக்கும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு ஆடுகிறது இந்திய அணி. 

இந்திய அணியின் மிகப்பெரிய பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதற்கேற்ப டாப் ஆர்டரும் பவுலர்களும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். இந்த உலக கோப்பையில் கோலியின் பங்களிப்பு பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரோஹித் சர்மா தான் தெறிக்கவிட்டுவருகிறார். 

தனது பார்ட்னரான தவான் காயத்தால் தொடரிலிருந்து விலகிய பின்னரும் கூட, அந்த கூடுதல் பொறுப்பையும் தோள்களில் சுமந்து அபாரமாக ஆடிவருகிறார் ரோஹித். லீக் சுற்றில் 8 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ரோஹித் சர்மா 8 இன்னிங்ஸ்களில் 647 ரன்களை குவித்துள்ளார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் 2003ல் 673 ரன்களை குவித்த சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். 2007 உலக கோப்பையில் 659 ரன்களை குவித்த ஹைடன் இரண்டாமிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 647 ரன்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். 

இன்னும் 13 ரன்கள் அடித்தால் ஹைடனின் சாதனையையும் 27 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரோஹித் சர்மா முறியடித்துவிடுவார். 

உலக கோப்பையில் அபாரமாக ஆடிவருவதால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அவரது புள்ளிகள் அதிவேகமாக உயர்ந்துள்ளன. விராட் கோலி முதலிடத்திலும் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் நீண்டகாலமாக உள்ளனர். உலக கோப்பைக்கு முன்னதாக இருவருக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் 51 ஆக இருந்தது. 

உலக கோப்பையில் அபாரமாக ஆடி 5 சதங்களை அடித்த ரோஹித் சர்மா, விராட் கோலியை வேகமாக விரட்டிவருகிறார். விராட் கோலி 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 885 புள்ளிகளுடன் இரண்டாமித்தில் உள்ளார். விராட் கோலியை விட 51 புள்ளிகள் பின் தங்கியிருந்த ரோஹித் சர்மா, உலக கோப்பையில் ஆடிய 8 இன்னிங்ஸ்களுக்கு பிறகு அதை வெறும் 6 ஆக குறைத்துவிட்டார். 

விராட் கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் வெறும் 6 தான் என்பதால், விரைவில் விராட் கோலியை ரோஹித் சர்மா பின்னுக்குத்தள்ள வாய்ப்புள்ளது. பொதுவாக அரைசதங்களை எளிதாக சதங்களாக மாற்ற வல்ல விராட் கோலி, இந்த உலக கோப்பையில் 5 அரைசதங்கள் அடித்தும் கூட அதில் ஒன்றைக்கூட சதமாக மாற்றவில்லை.