டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்துவந்த ரோஹித் சர்மாவிற்கு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டார் ரோஹித் சர்மா. 

தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்திய ரோஹித் சர்மா, ராஞ்சியில் நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். ரோஹித்தின் இந்த இன்னிங்ஸ் மிக சிறப்பானது. ஏனெனில் இந்திய அணி முக்கியமான மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்துவிட்ட நிலையில், பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ரோஹித் சர்மா. அந்த பணியை செவ்வனே செய்து அசத்தினார். 

இந்த தொடரில் நன்றாக ஆடியதன்மூலம் டான் பிராட்மேனின் ரெக்கார்டை பிரேக் செய்துள்ளார் ரோஹித் சர்மா. சொந்த மண்ணில் குறைந்தது பத்து இன்னிங்ஸில் அதிகபட்ச பேட்டிங் சராசரியை பெற்றதில், டான் பிராட்மேனின் சாதனையை ரோஹித் முறியடித்துள்ளார். இந்திய மண்ணில் ரோஹித் சர்மாவின் கடைசி பத்து இன்னிங்ஸ் ஸ்கோர் - 82*, 51*, 102*, 65, 50*, 176, 127, 14, 212. ரோஹித்தின் சராரசரி 99.84. இதன் மூலம் டான் பிராட்மேனின் சாதனையை ரோஹித் முறியடித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.