கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஆகிய இருவருக்கும் இடையே பேட்டிங்கில் கடும் போர் நடந்துகொண்டிருக்கிறது. இருவரும் போட்டி போட்டு ரன்களை அடித்து குவிப்பது, இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைகிறது. எதிரணிகளுக்கு பெரிய தொல்லையாக இருக்கிறது. இருவருக்கும் இடையேயான இந்த ஆரோக்கியமான போட்டி, இந்திய அணிக்கு நேர்மறையான முடிவுகளை பெற்றுத்தருகிறது. 

ரோஹித் சர்மாவின் சொந்த ஊரான மும்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மா தொடக்கம் முதலே பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். வெறும் 23 பந்தில் அரைசதம் அடித்த ரோஹித், 34 பந்தில் 71 ரன்களை குவித்தார். ரோஹித்தின் அதிரடி பேட்டிங்கால் உற்சாகமடைந்த ரசிகர்கள், வான்கடேவை ரோஹித் ரோஹித் என்ற முழக்கத்தால் அதிரவைத்தனர். 

ரோஹித் சர்மா அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, அதன்பின்னர் வந்த கோலி, ரோஹித்தின் பேட்டிங்கை மறக்கடிக்கும் வகையில், அதிபயங்கரமாக ஆடி 21 பந்திலேயே அரைசதம் அடித்தார். ரோஹித்தாவது 24 பந்தில் 71 ரன்கள் அடித்தார். கோலி 29 பந்தில் 70 ரன்களை குவித்து மிரட்டினார். கோலி இந்தளவிற்கு அதிரடியாக ஆடியதை பார்த்திருக்கவே முடியாது. அந்தளவிற்கு அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளையே அதிகமாக அடிக்கும் கோலி, இந்த போட்டியில் 7 சிக்ஸர்களை விளாசி தெறிக்கவிட்டார். 

ரோஹித் 71 ரன்களையும் கோலி 70 ரன்களையும் குவித்தனர். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இருவருமே 2633 ரன்களுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். முதல் போட்டியின் முடிவில் ரோஹித் முதலிடத்திலும், இரண்டாவது போட்டியின் முடிவில் ரோஹித்தைவிட ஒரு ரன் முன்னிலை பெற்று கோலி முதலிடத்திலும் இருந்த நிலையில், கடைசி டி20 போட்டி முடிந்த நிலையில், இருவரும் சம ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர். 

ரோஹித் சர்மாவின் சொந்த ஊரான மும்பையில் அவர் அதிரடி காட்ட, அவரது அதிரடியை மறக்கடிக்கும் அளவிற்கு கோலி அதிரடியில் மிரட்டினார். ஐபிஎல்லின்போது மும்பை மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே மும்பையில் நடக்கும் போட்டிகளில் ரோஹித்துக்குத்தான் ரசிகர்களின் முழு ஆதரவும் இருக்கும். ரோஹித் ரோஹித் என்ற முழக்கம் வான்கடேவையே அதிரவைக்கும். அதுமட்டுமல்லாமல் கோலியை கிண்டலடிக்கும் சம்பவமெல்லாம் அரங்கேறியிருக்கிறது. 

இவ்வாறு ரசிகர்களே, ரோஹித்துக்கும் கோலிக்கும் இடையேயான பனிப்போருக்கு ஒரு காரணமாக இருந்திருக்கின்றனர். அந்தவகையில், மும்பை வான்கடேவில் நேற்று ரோஹித்தும் கோலியும் போட்டி போட்டுக்கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தனர்.