Asianet News TamilAsianet News Tamil

ஹிட்மேனின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்: ரோஹித் சர்மாவின் 3 இரட்டை சதங்களின் ரீ-லைவ்.. வீடியோ

ரோஹித் சர்மாவின் 33வது பிறந்தநாளான இன்று, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் படைத்த அசாத்திய சாதனையை திரும்பிப் பார்ப்போம்.
 

rohit sharma 3 double ton re live videos
Author
India, First Published Apr 30, 2020, 3:40 PM IST

இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரும் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவின் பிறந்தநாள் இன்று. 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் ரோஹித் சர்மா.

2007ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதன் விளைவாக அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்தார். மிடில் ஆர்டரில் தொடர்ச்சியாக சொதப்பிய ரோஹித் சர்மாவின் திறமையை அறிந்த முன்னாள் கேப்டன் தோனி, அவரை தொடக்க வீரராக இறக்கிவிட்டார். அதன்பின்னர் அனைத்தும் வரலாறு. 

தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி கொண்ட ரோஹித் சர்மா, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து இந்திய அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். அதன்பின்னர் 2 இரட்டை சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, 3 இரட்டை சதங்களுடன் சாதனை நாயகனாக திகழ்கிறார். 

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால், அவரிடமிருந்து ரசிகர்கள் இரட்டை சதத்தை எதிர்பார்க்குமளவிற்கு தன் மீதான ரசிகர்களின் மதிப்பீட்டை உயர்த்தியிருக்கிறார் ரோஹித். அவரது பிறந்தநாளான இன்று, அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த 3 இரட்டை சதங்களின் ரீ லைவ்.

1. முதல் இரட்டை சதம்(209 vs ஆஸ்திரேலியா) - 2013

2013ல் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தான் ரோஹித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை விளாசினார். அந்த போட்டியில் ரோஹித் சர்மா 158 பந்தில் 209 ரன்களை குவித்தார். அவரது அதிரடியால் 50 ஓவரில் 383 ரன்களை குவித்த இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 326 ரன்களில் சுருட்டி வெற்றி பெற்றது. 

2. இரண்டாவது இரட்டை சதம் (264 vs இலங்கை) - 2014

2014ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டனில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் அடித்த இரட்டை சதம் தான் வரலாறு ஆகிவிட்டது. அந்த போட்டியில் 178 பந்தில் 33 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 264  ரன்களை குவித்து அசாத்திய சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் இனிமேல் இந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால் அது ரோஹித்தால் மட்டுமே முடியுமே தவிர, வேறு யாராலும் முடியாது. அந்த போட்டியில் 404 ரன்களை குவித்த இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

3. மூன்றாவது இரட்டை சதம் (208* vs இலங்கை) - 2017

2017ல் மீண்டும் இலங்கைக்கு எதிராக ஒரு இரட்டை சதமடித்தார். மொஹாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் 40 ஓவருக்கு பிறகு சதமடித்த ரோஹித் சர்மா, கடைசி 10 ஓவரில் அடுத்த சதத்தையும் அடித்து மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 115 பந்துகளில் முதல் சதத்தை அடித்த ரோஹித், அடுத்த 36 பந்தில் இரண்டாவது சதத்தை விளாசினார். அந்த போட்டிய்ல் 208 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் ரோஹித் சர்மா. அந்த போட்டியில் 392 ரன்களை குவித்த இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios