உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோற்று வெளியேறியது. இந்திய அணியின் சிக்கலாக இருந்துவந்த 4ம் வரிசை பேட்ஸ்மேனை 2 ஆண்டுகளாக தேடியும் இந்திய அணி நிர்வாகத்தால் சரியான வீரரை கண்டறிய முடியவில்லை. 

அதன் எதிரொலியாக உலக கோப்பையில் தோற்று இந்திய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. உலக கோப்பைக்கு பின்னர் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்தன. இந்திய அணி, ரோஹித் மற்றும் கோலி தலைமையில் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும், துணை கேப்டன் என்ற வகையில் ரோஹித்தின் ஆலோசனையை கேட்காமலேயே கேப்டன் கோலி தன்னிச்சையாக செயல்பட்டதாகவும் தகவல் வெளிவந்தது. மேலும் அணி தேர்விலும் அது எதிரொலித்ததாகவும் ஒரு தகவல் வந்தது.

மேலும் உலக கோப்பை சமயத்தில் 15 நாட்கள் மட்டுமே குடும்பத்தினரை தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்திருந்தது. ஆனால் கேப்டன் கோலியின் அனுமதியின்றி ரோஹித் சர்மா தொடர் முழுவதும் மனைவி ரித்திகாவை தங்கவைத்திருந்ததாகவும் இதுதொடர்பாக ரோஹித்திடம் கோலி கேட்கப்போய்த்தான் பிரச்னை வந்ததாகவும் ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அதற்கு முன்பிலிருந்தே ரோஹித் - கோலி பனிப்போர் குறித்து பேசப்பட்டுவருகிறது. எனவே இதுதான் இருவரின் மோதலுக்கு காரணம் என்று கூறமுடியாது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு கிளம்புவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் கோலியிடம், ரோஹித்துடனான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரோஹித்துடன் எந்த மோதலும் கிடையாது என திட்டவட்டமாக மறுத்தார். 

எனக்கும் ரோஹித்துக்கும் இடையே மோதல் என்று பேசப்படுவது குறித்து நானும் நிறைய கேள்விப்பட்டேன். ஆனால் ஓய்வறை சூழல் சரியாக இல்லையென்றால் வெற்றிகரமான அணியாக திகழ முடியாது. எனக்கும் ரோஹித்துக்கும் இடையே உண்மையாகவே மோதல் இருந்தால் எங்களால் எப்படி நன்றாக ஆட முடியும்? என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால் கோலி சொல்வது போல் கிடையாது. உண்மையாகவே இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருக்கலாம். அதற்கு வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் நாட்டுக்காக களத்தில் இறங்கி ஆடும்போது, எந்தவிதத்திலும் அவர்களின் ஆட்டத்தில் அது எதிரொலிக்காது. அவர்கள் முதிர்ச்சியான வீரர்கள். களத்தில் அவர்களது கவனம் முழுவதும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதில் இருக்குமே தவிர, ஈகோ பிரச்னையில் இருக்காது. 

அணிக்கு யார் அதிக பங்களிப்பு செய்கிறார்கள் என்ற ஆரோக்கியமான போட்டியே களத்தில் இருக்கும். அது அணிக்கு நல்லதுதான். தனிப்பட்ட முறையில் எவ்வளவு பிரச்னைகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் களத்திலோ ஆட்டத்திலோ அது எதிரொலிக்காது. 

அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஸ்டீவ் வாக் - வார்னே மோதல்தான். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கிற்கும் அவரது அணியில் ஆடிய டாப் ஸ்பின்னர் வார்னேவுக்கும் கொஞ்சம் கூட ஒத்துவராது. இருவரும் எலியும் பூனையும் போல. ஆனால் அது தனிப்பட்ட முறையிலான மோதலாக இருந்ததே தவிர, அது எந்தவிதத்திலும் இருவரின் ஆட்டத்தையும் அணியின் ஒற்றுமையையும் சீர்குலைத்ததில்லை. ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 1999ல் உலக கோப்பையை வென்றதோடு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அபாரமாகவே ஆடியது. ஸ்டீவ் வாக் ஒரு கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்பட்டார். வார்னே ஒரு ஸ்பின்னராக தனது பணியை அணிக்காக சிறப்பாக செய்தார். அதேபோலத்தான் ரோஹித்தும் கோலியும்...