இந்திய அணியின் வெற்றிகரமான தொடக்க ஜோடியாக ரோஹித் சர்மா - தவான் ஜோடி திகழ்கிறது. 

சச்சின் - கங்குலி, சச்சின் - சேவாக் தொடக்க ஜோடிக்கு பிறகு இந்திய அணியின் வெற்றிகரமாக தொடக்க ஜோடியாக ரோஹித் - தவான் ஜோடி திகழ்ந்துவருகிறது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த மற்றும் மிரட்டலான தொடக்க ஜோடியாக திகழ்கிறது. 

ரோஹித் - தவான் இருவரும் பல தொடக்க ஜோடி சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இது ரோஹித் - தவான் ஜோடியின் 16வது 100-க்கு அதிகமான பார்ட்னர்ஷிப் ஸ்கோர்.

இதன்மூலம் பல சாதனைகளை ரோஹித் - தவான் ஜோடி படைத்துள்ளது. ஐசிசி தொடர்களில் அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகளின் பட்டியலில் ரோஹித் - தவான் ஜோடி, கில்கிறிஸ்ட் - ஹைடன் ஜோடியை சமன் செய்துள்ளது. ஐசிசி தொடர்களில் ரோஹித் - தவான் ஜோடி 6 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. கில்கிறிஸ்ட்-ஹைடன் ஜோடியும் 6 முறை தான். எனவே ரோஹித் - தவான் ஜோடி, கில்லி-ஹைடன் ஜோடியை விரைவில் முந்திவிடும். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகமுறை 100 ரன்களை கடந்த ஓபனிங் பார்ட்னர்ஷிப்பில் 21 முறை 100 ரன்களுக்கு மேல் குவித்த சச்சின் - கங்குலி ஜோடி முதலிடத்தில் உள்ளது. 16 முறை 100 ரன்களுக்கு  மேல் குவித்த ரோஹித் - தவான் ஜோடி, இதிலும் கில்கிறிஸ்ட் - ஹைடன் ஜோடியை சமன் செய்துள்ளது. சச்சின் - கங்குலி ஜோடியை விரைவில் ரோஹித்-தவான் ஜோடி முந்திவிடும்.

சச்சின் - கங்குலி, கில்கிறிஸ்ட் - ஹைடன் என ஒருநாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய தொடக்க ஜோடிகளின் சாதனைகளை ரோஹித் - தவான் ஜோடி முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது.