Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ கடைசி டி20: சத்தியமா ரோஹித் சர்மா அதை மட்டும் செய்யமாட்டார்..! அடித்துக்கூறும் ராபின் உத்தப்பா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோஹித் சர்மா இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குவார் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
 

robin uthappa feels team india will not make any change in playing eleven combination for the last t20 against new zealand
Author
Kolkata, First Published Nov 21, 2021, 5:56 PM IST

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. இதையடுத்து இந்த தோல்வியை நினைத்து பெரிதாக கவலைப்படாமல், அடுத்த டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியில் ஆடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு இப்போதிலிருந்தே தயாராக தொடங்கிவிட்டது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே, சிறந்த ஆடும் லெவனை செட் செய்ய மற்றும் பென்ச் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இளம் வீரர்கள் இந்திய அணியில் எடுக்கப்பட்டனர். முதல் டி20 போட்டியில் அறிமுகமான வெங்கடேஷ் ஐயர், முதல் 2 போட்டிகளிலும் ஆடினார். 2வது போட்டியில் ஹர்ஷல் படேல் அறிமுகமானார்.

இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள யுஸ்வேந்திர சாஹல், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளிலும் ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்திய அணி முதல் 2 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று(21ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கவுள்ள கடைசி போட்டியில், முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல், டி20 உலக கோப்பை, இந்த நியூசிலாந்து தொடர் என தொடர்ச்சியாக ஆடிவரும் கேஎல் ராகுலுக்கு டெஸ்ட் தொடருக்கு முன்பாக, கடைசி டி20 போட்டியில் மட்டும் ஓய்வளித்துவிட்டு, அவருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஐபிஎல்லில் அசத்தலாக பந்துவீசிய ஆவேஷ் கானுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா எந்த மாற்றமும் செய்யமாட்டார் என்று ராபின் உத்தப்பா கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, நியூசிலாந்தை டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்யும் விதமாக, கடைசி டி20 போட்டியிலும் கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்திய அணி களமிறங்கும் என நினைக்கிறேன். இந்திய அணியில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று உத்தப்பா தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios