ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் தொடக்க வீரரான நஜீப் தரகாய் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் நஜீப் தரகாய் (29). ஆப்கானிஸ்தான் அணிக்காக 12 டி20 ஓவர் சர்வதேசப் போட்டிகளிலும், ஒரேயொரு ஒருநாள் சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். 2014 டி20 உலகக்கோப்பையில் அறிமுகப் போட்டியில் ஆடினார் நஜீப். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஜலதாபாத் நகரில் உள்ள  கடையில் பொருட்கள் வாங்க  சாலையைக்  கடக்க முயன்ற போது வேகமாக வந்த கார் மோதியது. 

இதில், தூக்கி வீசப்பட்ட அவர்  ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி நஜீப் தரகாய் உயிரிழந்தார். 

இந்த தகவலை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அவரது இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றம் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.