இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டி ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 358 ரன்களை குவித்தது. 359 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 12 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட போதிலும் கவாஜாவும் ஹேண்ட்ஸ்கம்பும் இணைந்து அபாரமாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 192 ரன்களை குவித்தது. கவாஜா 91 ரன்னில் ஆட்டமிழக்க, ஹேண்ட்ஸ்கம்ப் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கையில் எடுத்த ஆஷ்டன் டர்னர் அபாரமாக ஆடினார். டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்களான புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பவுலிங்கை வெளுத்து வாங்கி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். வெறும் 43 பந்துகளுக்கு 84 ரன்களை குவித்தார் டர்னர். 

டர்னர் தான் ஆட்டத்தை புரட்டி போட்டார். இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்ததும் அவர்தான். அவரது விக்கெட்டை வீழ்த்த ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தவறவிட்டார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்ததும் 37வது ஓவரில் டர்னர் களத்திற்கு வந்தார். 44வது ஓவரின் முதல் பந்தில் அவரை ஸ்டம்பிங் செய்ய அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பந்தை பிடிக்காமல் அந்த வாய்ப்பை ரிஷப் தவறவிட்டார். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட டர்னர், அதன்பிறகு அதிரடியாக ஆடி ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார். ரிஷப் பண்ட்டின் விக்கெட் கீப்பிங் படுமோசமாக இருந்தது.