இந்திய அணி நிர்வாகம் ரிஷப் பண்ட் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் தொடர்ந்து சிதைத்து கொண்டிருக்கிறார்.

இந்திய அணியில் 15 ஆண்டுகளாக கோலோச்சிய ஜாம்பவான் தோனியின் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளார் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் எதிர்காலம் என இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நெருக்கடி கொடுக்காமல் இருந்தாலும், ரிஷப் பண்ட்டுக்கு ஒரு நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது. 

இந்திய அணியின் சிக்கலாக இருக்கும் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டும் கூட, நான்காம் வரிசையில் அவர் இறக்கப்படவில்லை. ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசை வீரர் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் சூழலுக்கு ஏற்ப நான்கு மற்றும் ஐந்தாம் வரிசை வீரர்கள் இறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்திருந்தார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின், இரண்டாவது விக்கெட்டாக 16வது ஓவரில் ரோஹித் அவுட்டானார். எனவே இன்னும் 35 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். அப்படியான சூழலில், கோலி சொன்ன மாதிரி சூழலை கருத்தில் கொண்டு இறக்க வேண்டுமென்றால், ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் இறக்கியிருக்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட், அந்த மாதிரியான சூழலுக்கு ஏற்ப ஆடுவதற்கு இன்னும் பழகவும் இல்லை, அந்தளவிற்கு முதிர்ச்சியும் அடையவில்லை. 

அவரது இயல்பான ஆட்டம் என்பது அடித்து ஆடுவதுதானே தவிர, சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆடும் பக்குவம் இல்லை. எனவே 4ம் வரிசையில் ஐயரை இறக்கியிருக்கலாம். ரிஷப் பண்ட் 34 பந்துகள் ஆடி வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர், கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினார்.  அந்த போட்டியில் கோலியுடன் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்களை குவித்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஆனால் அந்த போட்டியில் 16வது ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட ரிஷப் பண்ட், தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது அணியின் சூழலை கருத்தில்கொண்டு பார்ட்னர்ஷிப் அமைப்பதா என்ற சந்தேகத்திலேயே அந்த இன்னிங்ஸை ஆடினார். சூழலுக்கு ஏற்பவும் ஆடமுடியாமல், தனது இயல்பான இன்னிங்ஸையும் ஆடமுடியாமல் 20 ரன்களில் வெளியேறினார் ரிஷப் பண்ட். 

டாப் 3 வீரர்கள் 40-45 ஓவர்கள் வரை ஆடினால், நான்காம் வரிசையில் ரிஷப்பை இறக்கலாம். இல்லையெனில் ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

ஆனால் கடைசி ஒருநாள் போட்டியிலும் ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசையில் இறக்கப்பட்டார். இந்த போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். ரிஷப் பண்ட் தொடர்ந்து ஏமாற்றமளித்த அதேவேளையில், ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாக ஆடினார். 

ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்ன செய்ய வேண்டுமோ, அதை இரண்டு போட்டியிலும் செய்தார். இரண்டாவது போட்டியில் பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரொடேட் செய்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி போட்டியில் தாறுமாறாக அடித்து ஆடினார். இதன்மூலம் தன்னால் எந்த சூழலிலும் அதற்கேற்ப ஆடி அணியை காப்பாற்ற முடியும் என நிரூபித்து காட்டினார்.

தன் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றாமல் தொடர்ச்சியாக ஏமாற்றமளித்துவருகிறார் ரிஷப் பண்ட். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்திய அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றிவிட்டதோடு, தனக்கான நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார்.