ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. 14ம் தேதி(நாளை) முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ளது. 14, 17, 19 ஆகிய தேதிகளில் முறையே மும்பை, ராஜ்கோட் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது, ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி தான் வென்றது. எனவே இந்த முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 

ஸ்மித், வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணியே, கடந்த முறை இந்தியாவை வீழ்த்திவிட்டது. இம்முறை ஸ்மித், வார்னர் அணிக்கு திரும்பியிருக்கும் நிலையில், மார்னஸ் லபுஷேனும் ஒருநாள் அணியில் இணைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பேட்டிங் ஆடி அல்டிமேட் ஃபார்மில் இருக்கும் லபுஷேனும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன், அலெக்ஸ் கேரி என அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. 

பவுலிங்கிலும் ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய சிறந்த பவுலர்கள் உள்ளனர். ரோஹித் - ராகுல் - கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் என இந்திய அணியின் டாப் ஆர்டர் அசத்தல் என்றால், வார்னர் - ஃபின்ச் - ஸ்மித் - லபுஷேன் என ஆஸ்திரேலிய அணியும் சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. இந்தியாவிற்கு பும்ரா - ஷமி, ஆஸ்திரேலியாவிற்கு கம்மின்ஸ் - ஸ்டார்க் என இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே இந்த தொடர் கடும் போட்டியாக இருக்கும். 

இந்நிலையில், டுவிட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ரிக்கி பாண்டிங். அப்போது அவரிடம் ரசிகர் ஒருவர், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடரை எந்த அணி வெல்லும்? உங்கள் கணிப்பு என்ன? என்று கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ரிக்கி பாண்டிங், உலக கோப்பை மற்றும் அதை தொடர்ந்து நடந்த டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, முழு நம்பிக்கையில், இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆனால் கடந்த முறை இந்தியாவில் ஆஸ்திரேலியாவிடம் தொடரை இழந்த இந்திய அணி, அதிலிருந்து மீண்டு இந்த முறை தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கிடையாது. முழு நம்பிக்கையுடன் இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. எனவே 2-1 என ஆஸ்திரேலிய அணி தொடரை வெல்லும் என பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், சாஹல், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா. 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), அஷ்டன் டர்னர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஹேசில்வுட், சீன் அப்பாட், நாதன் லயன்.