விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகியது, தனக்கு பெரிய சர்ப்ரைஸாக இருந்ததாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியிலிருந்து கேப்டன்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். பேட்டிங் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் கவனம் செலுத்துவதற்காகத்தான் விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். ஆனால் திடீரென யாருமே எதிர்பார்த்திராத விதமாக டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார்.
2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தது. கோலி தலைமையிலான இந்திய அணி தான் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையில் முதல் முறையாக 2018-2019 சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவந்தது. முதல் முறையாக நடத்தப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்றது. ஆனால் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.
கோலியின் கேப்டன்சியில் 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றது இந்திய அணி. அவரது கேப்டன்சியில் பெரும்பாலான சமயங்களில் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதலிடத்தில் இருந்தது. கோலியின் கேப்டன்சியில் தான் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. ஆசியாவிற்கு வெளியேயும் வெற்றிகளை பெறமுடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்து காட்டியவர் கோலி.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின் அவர் திடீரென கேப்டன்சியிலிருந்து விலகியது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கும் அது பெரும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கிறது. இதுகுறித்து பேசியுள்ள ரிக்கி பாண்டிங், விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விலகியது உண்மையாகவே எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் இப்படி சொல்ல காரணம் என்னவென்றால், ஐபிஎல் 14வது சீசனின் (2021)போது, கோலியுடன் பேசியபோது அவர் டெஸ்ட் கிரிக்கெட் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார், டெஸ்ட் கேப்டன்சியை எவ்வளவு நேசிக்கிறார் என்பது தெரிந்தது. டெஸ்ட் கேப்டன்சியில் கவனம் செலுத்துவதற்காக வெள்ளைப்பந்து கேப்டன்சியிலிருந்து விலகுவது குறித்து என்னுடன் பேசினார். அந்தளவிற்கு டெஸ்ட் கேப்டன்சியை அவர் நேசித்தார். அவரது கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய சாதித்திருக்கிறது. எனவே தான் அவரது கேப்டன்சி விலகல் முடிவை கேட்டபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்று பாண்டிங் தெரிவித்தார்.
