ஸ்மித் மற்றும் வார்னர் தடையில் இருந்த ஓராண்டு காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோல்விகளை சந்தித்துவந்த ஆஸ்திரேலிய அணி, அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியதை அடுத்து ஆஷஸ் தொடர், பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், நியூசிலாந்துக்கு எதிரான தொடர் என தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துவருகிறது. 

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருந்த ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடையில் இருந்தனர். இதையடுத்து டிம் பெய்ன் கேப்டனாகவும் டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாகவும் செயல்பட்டுவருகின்றனர். டிம் பெய்னின் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் தடுமாறியது. 

ஸ்மித்தும் வார்னரும் தடை முடிந்து அணிக்கு திரும்பிய பிறகுதான்  ஆஸ்திரேலிய அணி முழு வலிமை பெற்றது. ஆஷஸ் தொடர் வெற்றி, பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது என டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் கோலோச்ச ஆரம்பித்துவிட்டது ஆஸ்திரேலிய அணி. நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

ஸ்மித்தும் வார்னரும் சிறப்பாக ஆடினாலும், அவர்களை மிஞ்சி, மிகச்சிறப்பாக ஆடிவருகிறார் மார்னஸ் லபுஷேன். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்கிறார். குறைந்தது அரைசதம் அடித்துவிடுகிறார். நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்து அசத்தினார். 

மார்னஸ் லபுஷேன் சதங்களை குவித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் மெஷினாக திகழ்கிறார். இந்நிலையில், அடுத்த கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம் என முன்னாள் லெஜண்ட் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள பாண்டிங், டிம் பெய்னுக்கு அதிகமான வயதாகிவிடவில்லை. அவருக்கு 35 வயதுதான் ஆகிறது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான உடற்தகுதியுடன் தான் இருக்கிறார். எனவே இன்னும் ஓராண்டு காலம் தாராளமாக ஆடலாம். 

டிராவிஸ் ஹெட் துணை கேப்டனாக இருக்கிறார். ஆனாலும் லபுஷேன், இன்னும் 12-18 மாதங்களுக்கு இதேபோல் ஆடி தன்னை நிலைநிறுத்தி கொண்டால், கண்டிப்பாக அவரது பெயர் கேப்டன் பொறுப்புக்கு விவாதிக்கப்படும். கேப்டன் பொறுப்புக்கு சரியான நபராகத்தான் லபுஷேன் தெரிகிறார். ஆனால் டிம் பெய்ன் இன்னும் ஓராண்டுக்கு கேப்டனாக நீடிக்கலாம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.