கிரிக்கெட் ஆஸ்திரேலியா அண்மையில் ஒப்பந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களை அறிவித்தது. உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட சில முக்கியமான மற்றும் திறமையான வீரர்கள் ஒப்பந்தத்தில் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் தடையில் இருந்தபோது, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் பேட்டிங் ஆர்டருக்கு வலுசேர்த்ததுடன் மிகச்சிறப்பாக ஆடி அசத்தினார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச்சிறப்பாக ஆடினார். ஆனால் ஸ்மித் - வார்னர் வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட உஸ்மான் கவாஜா, தற்போது மொத்தமாக ஆஸ்திரேலிய வீரர்களின் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், உஸ்மான் கவாஜா குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இனிமேல் உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறுவது கடினம். அவருக்காக நான் வருந்துகிறேன். உஸ்மான் கவாஜா மிகத்திறமையான வீரர். ஆனால்  சர்வதேச கிரிக்கெட்டில் அவரது முழு திறமையையும் அவர் வெளிப்படுத்தவில்லை என்பது என் கருத்து. அவர் அவ்வப்போது பல சிறந்த இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார். ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

கவாஜா ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2887 ரன்களையும் 40 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1554 ரன்களையும் அடித்துள்ளார்.