விறுவிறுப்பாக நடந்துவரும் உலக கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்துள்ளது. இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ளது. 

உலக கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்க அணி, முதன்முறையாக தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தும், கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வு அறிவித்தார். டிவில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்க அணிக்கே பேரதிர்ச்சியாக இருந்தது. 

ஆனாலும் அவரது இடத்திற்கு மற்றொரு வீரரரை தயார் செய்து உலக கோப்பையில் ஆடவைத்தது தென்னாப்பிரிக்க அணி. உலக கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் பவுலிங் தான் பெரிய பலமாக பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்டெய்ன், இங்கிடி ஆகியோரின் காயம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. ஸ்டெய்ன் காயம் காரணமாக உலக கோப்பை தொடரிலிருந்து முழுவதுமாக விலகிவிட்டார். இங்கிடி இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. அவர்கள் இருவரும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய பாதிப்பு.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்டெய்னும் இங்கிடியும் ஆடியிருந்தால் அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருந்திருக்கும். இருவரும் ரபாடாவுடன் இணைந்து நெருக்கடி கொடுத்திருப்பார்கள். உலக கோப்பைக்கு முன்னதாக அணியின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றதே அந்த அணிக்கு பெரிய அடியாக இருந்தது. இந்நிலையில், அடுத்தடுத்து வீரர்கள் காயமடைந்தது, மேலும் பலத்த அடியாக விழுந்தது. 

டிவில்லியர்ஸ் இருந்திருந்தால் அவரை சுற்றியே அனைத்து வீரர்களும் இயங்குவர். அவர் இல்லாதது பெரிய இழப்புதான். டிவில்லியர்ஸ் இந்த உலக கோப்பையில் ஆடியிருந்திருக்கலாம், உலக கோப்பையில் ஆடுவதற்காக தனது ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறலாம் என்றெல்லாம் ரசிகர்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் உண்மையாகவே டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை வாபஸ் பெற்று உலக கோப்பையில் ஆட விருப்பம் தெரிவித்ததாகவும், தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் அவரை திரும்ப அணியில் எடுக்க மறுத்துவிட்டதாகவும் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ தெரிவித்துள்ளது.

உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய நாள், டிவில்லியர்ஸ் அணி நிர்வாகத்தை தொடர்புகொண்டு உலக கோப்பையில் ஆட விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் ஓய்வு அறிவித்துவிட்டு ஓராண்டாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆடாத டிவில்லியர்ஸை திடீரென உலக கோப்பை அணியில் எடுக்க முடியாது என்பதால் டிவில்லியர்ஸின் கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்கவில்லையாம். மேலும் டிவில்லியர்ஸின் விருப்பத்தை ஏற்று அவரை மீண்டும் அணியில் சேர்த்தால், அவர் இல்லாத ஓராண்டில் அவரது இடத்தில் ஆடிவரும் வீரரை ஏமாற்றுவதாக அமைந்துவிடும் என்பதாலும் டிவில்லியர்ஸின் விருப்பத்தை ஏற்க அணி நிர்வாகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாப்பிரிக்க அணி நிர்வாகத்தின் முடிவு சரியானது மட்டுமல்லாமல் நியாயமானதும் கூட. ஏனெனில் திடீரென ஓய்வு அறிவித்துவிட்டு பின்னர் மீண்டும் ஆடுகிறேன் என்றால், அவரது இடத்தை பூர்த்தி செய்த வீரர் ஏமாந்துவிடுவார். அதுமட்டுமல்லாமல் நினைத்தால் போவதும், பின்னர் திரும்ப வருவதும் சரியான செயல் அல்ல.