வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய இங்கிலாந்து அணி அந்த தொடரை 2-1 என வென்றது. ஆகஸ்ட் 5ம் தேதி முதல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ளது. இதற்கிடையிலான காலக்கட்டத்தில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நடக்கிறது. 

ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர்  ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால் ஜேம்ஸ் வின்ஸ், டாம் பாண்ட்டன், ரீஸ் டாப்ளி போன்ற அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட வீரர்களுக்கு மீண்டும் அயர்லாந்து தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. 

அந்தவகையில், 2016ம் ஆண்டுக்கு பிறகு 4 ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த ஃபாஸ்ட் பவுலர் ரீஸ் டாப்ளிக்கு, அணியின் நட்சத்திர வீரர்கள் ஆடாததால் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது. 

அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு 4-5 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆடாத வீரர்களுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைப்பதே மிகவும் அரிதான விஷயம். அப்படி கிடைத்த அரிய வாய்ப்பை, பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் ரீஸ் டாப்ளி, அவருக்கு கிடைத்த கம்பேக் சான்ஸை சரியாக பயன்படுத்தவில்லை. 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாப்ளி 9 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அதுவும் இன்னிங்ஸின் கடைசி பந்தில் அந்த விக்கெட்டை வீழ்த்தினார். மெக்பிரைனை 24 ரன்களில் கடைசி பந்தில் அவுட்டாக்கினார். 

இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே புதிய பந்தில் 5 ஓவர்கள் தொடர்ச்சியாக வீச வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் இயன் மோர்கன். ஆனாலும் டாப்ளியால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை. அவர் நன்றாக ஆடினாலும், அணியில் நிரந்தர இடம் கிடைக்கப்போவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் கூட அவர் பெரிய சிரத்தை எடுக்காமல் இருந்திருக்கலாம். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி நிர்ணயித்த 213 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டிவருகிறது.